Search This Blog n

07 December 2013

ஈழத் தமிழர் அழிவை ‘இனப்படுகொலை’ ஒருநாளும் குறிப்பிட்டதில்லையே!-

 
இன்றுவரை மத்திய அரசு ஈழத் தமிழர் அழிவை ‘இனப்படுகொலை’ என்று ஒருநாளும் குறிப்பிட்டதில்லையே. உங்களுக்குத் தெரிந்த இந்த உண்மை, நீங்கள் முக்கிய அங்கம் வகிக்கும் மன்மோகன் அரசுக்கு மட்டும் ஏன் தெரியாமல் போனது? இவ்வாறு குறிப்பிட்டு தமிழருவி மணியன் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு மடல் ஒன்றை வரைந்துள்ளார்.

மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு…
வணக்கம். வளர்க நலம்.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலையும்’ என்ற தலைப்பில் சென்னையில் ‘சிந்தனையாளர்கள்’ பங்கேற்ற அரியதோர் கருத்தரங்கில் நீங்கள் ஆற்றிய உரையில் வழங்கிய அபூர்வமான விளக்கங்களை நான் அறிய நேர்ந்தது.

இனப்படுகொலையைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இதுகுறித்து விரிவான, தெளிவான, நேர்மையான, உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் விசாரணை நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்கும் வரை இந்திய அரசு ஓயாது. இலங்கைத் தமிழர்களை நாங்கள் கைவிட மாட்டோம் என்று ராஜீவ் காந்தியின் பெயரால் சூளுரைக்கிறோம் என்று நீங்கள் சங்கநாதம் செய்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி.
ஈழ நிலத்தில் இலங்கை அரசு இனப்படுகொலையை நடத்தியது என்று முதன்முதலாக நீங்கள் ஒப்புக்கொண்டதற்கு நன்றி. உங்கள் வாக்குமூலம் மத்திய அரசின் வாக்குமூலம் என்று நாங்கள்

ஏற்கக்கூடுமா? மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் திரு. ராசா ‘இனப்படுகொலை’ என்று பேசியதை அவைக்குறிப்பில் இருந்து உங்கள் அரசு அகற்றியது ஏன்?
இன்றுவரை மத்திய அரசு ஈழத் தமிழர் அழிவை ‘இனப்படுகொலை’ என்று ஒருநாளும் குறிப்பிட்டதில்லையே. உங்களுக்குத் தெரிந்த இந்த உண்மை, நீங்கள் முக்கிய அங்கம் வகிக்கும் மன்மோகன் அரசுக்கு மட்டும் ஏன் தெரியாமல் போனது?

இரண்டாம் உலகப் போரில் யூத இனத்தைப் படுகொலை செய்த ஹிட்லரின் நாஜிப் படையின் இரக்கமற்ற நடவடிக்கைகளால் அதிர்ந்துபோன சர்வதேச சமுதாயம், இனியொரு முறை இதுபோன்ற அரக்க மனதுடன் எந்த அரசும் செயல்பட அனுமதிக்கலாகாது என்று தீர்க்கமான முடிவுடன்… ஐக்கிய நாடுகளின் பொதுக்குழுவில் டிசம்பர் 9, 1948 அன்று இனப்படுகொலையைத் தடுக்கவும். மீறுவோரைத் தண்டிக்கவும் ஓர் அமைப்பை உருவாக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி, ஜனவரி, 12, 1951 அன்று நடைமுறைப்படுத்தியது. அதுதான் ‘Genecide convention’ என்பதை அறிவார்ந்த நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். ஓர் அரசு இழைக்கும் கொடுமைகளிலேயே கடுமையானதும், மன்னிக்க முடியாததும் இனப்படுகொலை என்பதில் இரு கருத்து இருக்கவே இயலாது.

இனப்படுகொலையைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது’ என்று நீங்கள் மனிதகுல நாகரிகத்தின் உச்சத்தில் நின்று உரத்த குரலில் அறிவித்துவிட்டீர்கள். ஆனால், இனப்படுகொலை இலங்கை அரக்கர்களால் முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய போது நீங்களும், உங்கள் மத்திய அரசும் வெறும்

மௌனப் பார்வையாளர்களாக மட்டும் இருக்கவில்லை, அந்த மாபாதகச் செயலுக்குப் பக்க பலமாகவும் இருந்தீர்கள் என்பதை உலகம் நன்கறியும்.
ஈழத் தமிழர் அழிவுக்கு நாள் குறித்த இலங்கை அரசுக்கு இணக்கமாக நடந்துகொண்ட நீங்கள், போரை நிறுத்த எவ்வளவோ முயன்றதாகச் சொல்கிறீர்கள். கேழ்வரகில் நெய்யென்றால் கேட்பவர்களுக்கா புத்தியில்லை?

குற்றவாளிகளைத் தண்டிக்கும் வரை இந்திய அரசு ஓயாது’ என்கிறீர்களே… குற்றவாளிகள் ராஜபக்ச சகோதரர்களைத் தவிர வேறு யார்? ஒரே நாளில் 40 ஆயிரம் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் கொன்றுகுவித்த ராஜபக்சவை உங்கள் அரசுதானே குடியரசு மாளிகையில் இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்று விருந்தோம்பி மகிழ்ந்தது? கொமன்வெல்த் விளையாட்டு அரங்கில் அவருக்குத்

தனிமரியாதை தந்து பரவசப்பட்டவர் நம் பாரதப் பிரதமர்தானே! புத்தகயாவிலும், திருப்பதியிலும் அவர் புனித யாத்திரை நடத்துவதற்கு அனுமதியும், பாதுகாப்பும் அளித்தது யார்? நீங்கள் அறிவாளி என்பதில் எங்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. அதற்காக, நாங்கள் எதையும் நம்பும் முட்டாள்கள் என்று நீங்கள் முடிவெடுத்துப் பேசுவதில் நியாயமில்லை.

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம், வடக்கு – கிழக்கு மாகாண இணைப்பு, தமிழர்களின் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் பெற்றுத்தரும் 13-வது திருத்தத்தை இலங்கை அரசு நிறைவேற்றும் வரை இந்தியா ஓயாது’ என்றும் நீங்கள் சுருதி பேதம் சிறிதும் இல்லாமல் சொல்லி இருப்பதைப் படித்தபோது சிரிப்பை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை சிதம்பரம் அவர்களே!

ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் 1987-ல் உருவானது. அது, இடையில் அரசியலமைப்புச் சட்டத்தில் 13-வது திருத்தமாக நவம்பர் 14, 1987 அன்று அங்கீகரிக்கப்பட்டது. இடையில் 26 ஆண்டுகள் ஓடிவிட்டன. நீங்களும், இந்திய அரசும் இன்றுவரை இடையறாமல் ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வை 13-வது திருத்தம் மூலம் பெற்றுத்தருவதற்கு இரவு பகல் பாராமல் முயன்றுகொண்டிருக்கிறீர்கள்.

ஆனால், அந்த அரசியல் தீர்வோ இந்திய அரசின் இயலாமையால் தொடுவானம்போல் பிடிபடாமல் விலகி நின்று வேடிக்கை காட்டுகிறது. ஏன் இந்த நிலை என்று எவரேனும் கேட்டால், விடுதலைப் புலிகள் தடையாக இருந்தனர் என்று தயங்காமல் பழிதூற்றுவீர்கள்.

விடுதலைப் புலிகள் இந்திய அரசின் ஆதரவோடு இலங்கை இராணுவத்தால் மே 18, 2009 அன்று முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக ராஜபக்ச ஆரவாரத்துடன் அறிவித்து நான்கரை ஆண்டுகள் நடந்துவிட்ட பின்பும், 13-வது திருத்தம் ஏன் நடைமுறைக்கு வரவில்லை நிதியமைச்சரே?

போர் நடந்த நேரத்தில் 13-வது திருத்தம் வழங்கும் உரிமைகளோடு கூடுதலாகவும் சில உரிமைகள் ஈழத் தமிழருக்கு வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கிய ராஜபக்சவின் வாய் மலர்ந்த அரசியல் தீர்வுதான் ’13 ப்ளஸ்’ என்பதை அரசியல் விழிப்பு உணர்வுள்ள ஒருவராவது மறக்க முடியுமா?
இன்று அதே ராஜபக்ச, தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது பற்றிப் பேச நான் என்ன முட்டாளா?’ என்று ஆணவத்துடன் பத்திரிகையாளர்களிடம் பதிவு செய்ததையும், ’13 மைனஸ்’ என்று புதிய பல்லவி பாடுவதையும் மன்மோகன் அரசு ஏன் மனதில் கொள்ளவில்லை?

ஈழத் தமிழருக்குரிய உரிமைகள் அனைத்தையும் அள்ளி வழங்கும் அதிசய அட்சய பாத்திரம் 13-வது திருத்தம் என்பது போன்ற பொய்யான மாயத்தோற்றத்தை நீங்களும், காங்கிரஸ் அறிவு ஜீவிகளும் இன்னும் எவ்வளவு காலம் உருவாக்கி இந்த இனத்தை ஏமாற்றப் போகிறீர்கள்?

இந்திய மாநிலங்களுக்குரிய உரிமைகள் ஈழ மண்ணில் வடக்கிலும் கிழக்கிலும் சென்று சேர இந்த 13-வது திருத்தம் எந்த வகையில் உதவக்கூடும்? ராஜபக்சவின் கண்ணசைவுக்கு ஏற்பக் காரியமாற்றும் ஆளுநரே உண்மையான நிர்வாக அதிகாரம்(executive power) உள்ளவர். அவருக்கு ‘உதவுவதும் பரிந்துரைப்பதும்’ தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் பணி. நிதி மேலாண்மை ஆளுநர் வசம். ஆளுநர் விருப்பத்துக்கு இசைய மறுக்கும் மாகாண சபை கலைக்கப்படும். அந்த அதிகாரம் இலங்கை அதிபர் கையில்… 13-வது திருத்தம் சொல்லும் செய்தி இதுதானே!

சட்டம்-ஒழுங்கு, காவல் துறை, அரசு நிலம் என்று எதன் மீதும் முற்றுரிமை மாகாண அவைக்கு அறவே இல்லை. ‘தேசிய நலன்’ என்ற போர்வையில் இலங்கை நாடாளுமன்றம் தமிழர் நலனுக்கு எதிராக எந்தச் சட்டத்தையும் இயற்ற முடியும். இதுதானே நீங்கள் முயன்று உருவாக்கிய 13-வது திருத்தத்தின் அம்சங்கள்!

வடக்கும் கிழக்கும் இணைந்து ஒரே மாகாணமாக மாறும். சிங்களத்துடன் தமிழ், இலங்கையின் ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப்படும், ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும்’ என்ற இரண்டு அம்சங்கள் மட்டுந்தான் ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் உருப்படியானவை. ஆனால், அந்த இரண்டும் சிங்கள பௌத்த பேரினவாத கூட்டத்தால் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட போது, காந்தியின் குரங்குகளாக (இது தவறான சொற்பிரயோகம் இல்லை) நீங்கள் அனைவரும் காட்சி தந்தது ஏன்? விளக்குவீர்களா?

எந்த உரிமையும் தமிழருக்குத் தருவதற்கு வழிவகுக்காத இந்த 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும் சிங்கள அரசுக்குச் சம்மதம் இல்லை. இதை நடைமுறைப்படுத்தி ஈழத் தமிழரின் ‘அரசியல் அதிகாரம்’ பழுதுபடாமல் பாதுகாக்கப்படும் வரை இந்திய அரசும் நீங்களும் ஓயப்போவதே இல்லை. நல்ல நாடகம்.

நீங்கள் ஒரு கற்றறிவாளர், புகழ்பெற்ற வழக்கறிஞர், சர்வதேச சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர். இந்த ஏதுமறியாப் பாமரனுக்கு நீங்கள்தான் தெளிவான பதிலைத் தரக்கூடும். இரண்டு இறையாண்மை மிக்க நாடுகள் பலமுறை கூடிப் பேசி, விவாதித்து… இறுதியில் ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டால், அந்த ஒப்பந்தம் இரு நாடுகளையும் சம அளவில் கட்டுப்படுத்துவதுதானே நியாயம்?

பின்னாளில் அரசுப் பொறுப்பில் அமரும் அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புக்கேற்ப ஒரு நாடு தன்னிச்சையாக அந்த ஒப்பந்தத்தைக் குப்பைக்கூடையில் வீசியெறிந்தால், அந்த இழிசெயலை இன்னொரு நாடு பார்த்தும் பாராமல் நடந்துகொண்டால், இரண்டு அரசுகளின் ‘இறையாண்மை’ என்னாவது? இறையாண்மை பற்றி அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கும் நீங்கள்தான் இந்த அறிவிலிக்கு விளக்கவுரை வழங்க வேண்டும்.

ராஜபக்ச அரசு, இப்போது 13-வது திருத்தத்தை நிராகரித்தாலோ, நீர்த்துப்போகச் செய்தாலோ, தார்மிக அடிப்படையில் அது ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கும் தகுதியை இழந்துவிடாதா? அதனுடைய தவறைத் தட்டிக் கேட்கும் பொறுப்பு இந்தியாவுக்கு இல்லையா? நீங்கள்தான் எனக்குத் தெளிவுரை தரவேண்டும். காரணம், காங்கிரஸில் உள்ள ‘அறிவுஜீவிகளின் ஆதர்சம்’ நீங்கள் ஒருவர்தான் என்று பழைய காங்கிரஸ்காரனாகிய நான் பூரணமாக அறிவேன்.

இலங்கை இறையாண்மை பெற்ற தனி நாடு. அங்கு சிறுபான்மையினர் தனி நாடு கேட்க முடியாது. இதில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது. அறிவுப்பூர்வமாக அரசியல் முடிவெடுக்க வேண்டும்’ என்று அறிவுரை வழங்கிய நீங்கள், இந்தியாவில் காஷ்மீர், நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களின் பிரிவினை கோரிக்கையை நினைவூட்டியிருக்கிறீர்கள். இந்திரா காந்தி வங்கதேசத்தைப் பிரித்துக் கொடுக்கப் படை நடத்தியபோது ‘பாகிஸ்தான் இறையாண்மை’ பறிபோவதை ஏன் சிந்திக்கவில்லை?

ஈழத் தமிழரின் பசியாற்ற ராஜீவ் காந்தி வான்வழியாக விமானங்களை அனுப்பி உணவுப்பொருள்களை வீசியபோது ‘இலங்கை இறையாண்மை’ மீறப்படுவதை ஏன் பொருட்படுத்தவில்லை? அப்போதெல்லாம் காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் பிரிவினைக்குரல் எழவில்லையா?
ஒரு இறையாண்மை உள்ள நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தருவது எளிதல்ல’ என்று புத்தஞானம் போதிக்கிறீர்கள். அல்பேனியர்களுக்கும் செர்பியர்களுக்கும் ஒத்துவராத நிலையில் நடந்த இனப்போரில் 11 ஆயிரம் பேர் பலியானதும், பத்து லட்சம் அல்பேனியர்கள்

துரத்தியடிக்கப்பட்டதும், செர்பியர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட அல்பேனியர்கள் சர்வதேச சமுதாயத்தின் அங்கீகாரத்துடன் ‘கொ சோவா’ தனிநாடு கண்ட சரித்திரம் உங்களுக்குத் தெரியாதா? யுகோஸ்லேவியா இன அடிப்படையில் சிதறுண்டதைச் சிந்தியுங்கள்.
ஆப்பிரிக்காவில் எரித்ரியா, தெற்கு சூடான், இந்தோனேஷியாவின் பிடியில் இருந்து விடுபட்ட திமூர் ஆகியவற்றில் மக்கள் வாக்கெடுப்பு மூலம் தனி நாடு கண்ட வரலாற்றுப் பக்கங்களை உங்கள் பணிகளுக்கிடையில் கொஞ்சம் பிரித்துப் படியுங்கள். நீங்கள் மிகவும் ‘சீரியஸான’ மனிதர் என்று இதுவரை நினைத்திருந்தேன்.

வடிவேலுவைவிட நகைச்சுவை உங்களுக்கு நன்றாக வருவதை இன்றுதான் அறிந்தேன். ‘சர்வதேச அரங்கில் மன்மோகன் அரசு கடந்த நான்கரை ஆண்டுகள் மேற்கொண்ட கடும் முயற்சியினால்தான், கனடா போன்ற நாடுகள் கொழும்புக்கு எதிராகப் பேசிவருகின்றன’ என்று எப்படி உங்களால் இவ்வளவு நகைச்சுவையாகப் பேச முடிகிறது?

கொஞ்சம் போனால், பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் மன்மோகனிடம் நடத்திய ஆலோசனைப்படியே யாழ்ப்பாணம் போனதாகவும், காமன்வெல்த் மாநாட்டில் இலங்கைக்கு எதிராகப் பேசியதாகவும் கதை சொல்ல முனைவீர்களோ?

சிதம்பரம் அவர்களே… சமத்துவம் இல்லாத இடத்தில் சமதர்மம் இருக்காது. சமதர்மம் நிலவாத சூழலில் சுதந்திரக் காற்றை யாரும் சுவாசிக்க இயலாது. சிங்கள பௌத்த பேரினவாத அரசும், ராஜபக்ச சகோதரர்களும், இனவாத அமைப்புகளும், வெறிபிடித்த பௌத்த துறவிகளும் (!) ஒருநாளும் ஈழத் தமிழருக்கு எந்த உரிமையும் வழங்கப்போவது இல்லை.

இலங்கையைப் போன்ற போக்கிரி அரசை ‘நட்பு நாடு’ என்று நீங்களும் உங்கள் அரசும் பாராட்டலாம். ஆனால், உலக நாடுகள் நீண்ட நாள் வேடிக்கை பார்க்காது. ஒரு நாள் அவை வெகுண்டு எழும். அப்போது ஈழ மக்கள் வாக்கெடுப்பு (Referendum) மூலம் நிச்சயம் தமிழீழம் மலரும்.

குற்றவாளிகளைத் தண்டிக்கும் வரை இந்தியா ஓயாது என்றீர்கள். அடுத்த நாளே அந்தக் குற்றவாளிகளின் கடற்படையை வலுப்படுத்தி எங்கள் மீனவர்களை மேலும் கொன்று குவிக்க வழிவகுக்கிறீர்கள். உங்கள் வார்த்தைகளுக்கு நம்பகத்தன்மை இல்லை என்பதை நீங்களே இதற்கு முன்பு நிரூபித்திருக்கிறீர்கள்.
தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து விலகி, ஜனநாயகப் பேரவை நாயகராக நீங்கள் வலம் வந்தபோது ஒரு வார இதழில் ‘நமக்கே உரிமையாம்’ என்று ஒரு கட்டுரைத் தொடரை வடித்துத் தந்தது உங்கள் நினைவில் நிழலாடுவது உண்டா? ‘இந்தியாவின் தேர்தல் விதிகளை மாற்றுவதை ஆதரிப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

முதலில் மாற்றப்பட வேண்டிய விதி எது தெரியுமா? யாரும் 10 ஆண்டுகளுக்கு மேல் பிரதமராகவோ, முதலமைச்சராகவோ இருக்க முடியாது என்றொரு விதியை இயற்ற வேண்டும். அதேபோல் யாரும் மூன்று பதவிக் காலங்களுக்கு (15 ஆண்டுகளுக்கு) மேல் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கும் தடைவிதித்து சட்டம் இயற்ற வேண்டும்.

பழையன கழிவதற்கும், புதியன புகுவதற்கும் இதுவே சிறந்த வழி’ என்று அதில் ஊருக்கு உபதேசம் செய்தீர்களே… அதன்படி நீங்கள் நின்றீர்களா? ‘தேர்தல் விதியையே மாற்றி எழுதிய’ மகத்தான மனிதரல்லவா நீங்கள்!

பாவம் நீங்கள்… ‘இந்த கூட்ட அமைப்பாளரும் நான்தான். அழைப்பாளரும் நான்தான். பேச்சாளரும் நான்தான்’ என்று எவ்வளவு வெளிப்படையாக உங்கள் இதய வலியை இறக்கிவிட்டீர்கள்! முதலில் பல்குழுக்களாகப் பாழ்பட்டுக் கிடக்கும் தமிழ்நாடு காங்கிரஸை ஒன்றாக்கப் பாருங்கள். அதற்குப் பிறகு இலங்கையின் வடக்கையும் கிழக்கையும் ஒன்றாக்க ஓயாமல் போராடலாம்!

0 கருத்துகள்:

Post a Comment