அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, உள்ளிட்ட 9 பேர் நேற்று சி.பி.ஐ. தனி கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அப்போது அவர்கள் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களின் மீது நாளை(புதன்கிழமை) விசாரணை நடைபெறுகிறது.
ரூ.200 கோடி கைமாறிய விவகாரம்
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இதில், 2ஜி வழக்கில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறிய விவகார தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி, தயாளு அம்மாள், கலைஞர் டி.வி.யின் மேலாண்மை இயக்குனர் சரத்குமார், பி.அமிர்தம், சுவான் டெலிகாம் புரமோட்டர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, குசேகான் புரூட்ஸ் அண்டு வெஜிடபிள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், இந்தி திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகிய 10 தனிநபர்களின் பெயர்களும் மற்றும் சுவான் டெலிகாம், குஸேகான் ரியல்டி, சினியுக் மீடியா, கலைஞர் டி.வி. டைனமிக்ஸ் ரியல்டி, எவர்ஸ்மைல் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி, கோன்வுட் கன்ஸ்ட்ரக்சன்ஸ் அண்டு டெவலப்பர்ஸ், டி.பி.ரியல்டி, நிஹார் கன்ஸ்ட்ரக்சன்ஸ் ஆகிய 9 நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்று உள்ளன.
சம்மன் அனுப்பியது
இந்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்த தேவையான முகாந்திரம் உள்ளதாக கூறினார்.
எனவே இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தயாளு அம்மாள் உள்ளிட்ட அனைவரும் மே 26–ந் தேதி (நேற்று) நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இது தொடர்பாக அவர்களுக்கு சம்மனும் அனுப்பப்பட்டது.
ஆ.ராசா, கனிமொழி ஆஜர்
அதன்படி முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., உள்ளிட்டோர் நேற்று சி.பி.ஐ. தனிகோர்ட்டில் ஆஜரானார்கள். ஆனால் உடல் நலக்குறைவால் தயாளு அம்மாள் ஆஜராகவில்லை.இதேபோல், அமலாக்கப் பிரிவு குற்றம் சாட்டியுள்ள 9 நிறுவனங்களின் சார்பில் அந்த நிறுவனங்களில் பிரதிநிதிகள் ஆஜர் ஆனார்கள்.
தயாளு அம்மாள் தரப்பு வக்கீல் வாதிடுகையில், தயாளு அம்மாள் உடல்நலக்குறைவுடன் இருப்பதாகவும் புரிந்துகொள்வதில் அவருக்கு சிரமம் இருப்பதால் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை நீதிபதி ஓ.பி.சைனி ஏற்றுக்கொண்டு தயாளு அம்மாள் நேரில் ஆஜராவதற்கு நேற்று ஒருநாள் மட்டும் விலக்கு அளித்தார்.
நாளை விசாரணை
மேலும் 28–ந்தேதி(நாளை) அன்று தயாளு அம்மாளுக்காக அவரது வக்கீல் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்றும் ஜாமீன் அளிப்பது குறித்து தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்றும் நீதிபதி கூறினார்.நேற்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 9 பேர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களின் மீதான விசாரணை நாளை(புதன்கிழமை) எடுத்து கொள்ளப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வக்கீல் நீதிபதியிடம், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கப்பிரிவின் எந்த ஆவணங்களையும், தங்களுக்கு அளிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
ஆவணங்களை வழங்க உத்தரவு
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஓ.பி.சைனி இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அளிக்குமாறு அமலாக்கப்பிரிவு அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் ‘இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கப்பிரிவிடம் எத்தனை ஆவணங்கள் உள்ளதோ அத்தனையும் உங்களுக்கு கிடைக்கும். அடுத்த 2 நாட்களுக்குள் அந்த ஆவணங்கள் அனைத்தையும் நீங்கள் ஆய்வு செய்து முடித்துவிடவேண்டும்’ என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நீதிபதி கூறினார்.
0 கருத்துகள்:
Post a Comment