தருமபுரி மாவட்டத்தில் அரசு மதுக் கடைகளை மூட வலியுறுத்தி பொதுமக்களுடன் இணைந்து விரைவில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் தேசிய ஜனநாயக் கூட்டணி சார்பில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து, தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
வியாழக்கிழமை தருமபுரி ஒன்றியத்துக்குள்பட்ட ஏமகுட்டியூர் கிராமத்தில் வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்து பேசியது: மக்களவைத் தேர்தலில் பண பலம், அதிகார பலத்தால் திராவிடக் கட்சிகள் போட்டியிட்டன. ஆனால், பணத்தைப் பெரிதாக நினைக்காமல், முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தத் தொகுதி மக்கள் பாமகவுக்கு வாக்களித்து, என்னை வெற்றி பெறச் செய்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தருமபுரி மாவட்டத்தில் தொழிற்சாலைகளைத் தொடங்கி வேலைவாய்ப்பைப் பெருக்கிட நடவடிக்கை எடுப்பேன்.
தருமபுரி மாவட்டத்தில் ஓராண்டில் ரூ.1900 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இந்தப் பணத்தை மதுவுக்கு
செலவழிக்காமல் இருந்திருந்தால் மக்களுக்கு பேருதவியாக இருந்திருக்கும்.
எனவே, மாவட்டத்தில் உள்ள அரசு மதுக் கடைகளை மூட வலியுறுத்தி, பொதுமக்களுடன் இணைந்து விரைவில் போராடுவேன் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.சரவணன், வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பாடி செல்வம் , கிழக்கு மாவட்டச் செயலாளர் அரசாங்கம், மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் தலைவர் வெங்கடேசுவரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
Post a Comment