திருவண்ணாமலையில் மனைவியுடன் உள்ள தகராறில் தந்தையே குடிபோதையில் மகளை கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கோவிந்தபட்டு குப்பம் தாங்கலை சேர்ந்தவர் முனுசாமி, இவர் கம்பி கட்டும் தொழிலாளி. இவரது மனைவி கௌரி.
இந்த தம்பதியின் மகள் கிரிஜா 3ம் வகுப்பு படித்து வந்தார். மேலும், ஜிண்டா என்ற மகள்களும், வெற்றி, பெரியதுரை என்ற மகன்கள் உள்ளனர்.
கௌரி நடத்தையில் முனுசாமி சந்தேகப்பட்டதால் கௌரிக்கும், முனுசாமிக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த முனுசாமி மனைவி கௌரியிடம் தகராறில் ஈடுபட்ட போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது கௌரி வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த முனுசாமி குழந்தைகளை தாக்கினால் கௌரி வந்து விடுவாள் என்று கருதி மகள் கிரிஜாவை தாக்கியுள்ளார்.
மேலும், தன் மகள் என்றும் பாராமல் அருகில் இருந்த கத்தியை எடுத்து சிறுமியின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதனால், அந்த சிறுமி அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த 2வது மகள் ஜிண்டா அருகில் ஓடிவந்தாள். அவள் கையிலும் கத்தியால் கீறியுள்ளார்.
இந்நிலையில், குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வருவதற்குள் முனுசாமி தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து பொதுமக்கள் சாத்தனூர் அணை பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் கிரிஜாவின் பிணத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், காயமடைந்த ஜிண்டா திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முனுசாமியை கைது செய்துள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment