கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் செவ்வாய்க்கிழமை இரவு இடி, மின்னல், சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் சுமார் 2 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால், ஊத்தங்கரை சுற்றுப் பகுதி கிராமங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. ஊத்தங்கரை, கல்லூர், வெங்கடதாம்பட்டி, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சூறைக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் பழமையான புளியமரங்கள் வேரோடு சாய்ந்தன. மரக் கிளைகள் முறிந்து மின் கம்பங்கள், வயர்களில் விழுந்ததால் மின் விநியோகம் தடைபட்டது. பலத்த மழையால் மழைநீர் சாலையில் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. நீர் நிலைகள் வறண்ட நிலையில், திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஊத்தங்கரை காவல் நிலைய வளாகத்தில் இரண்டு வேப்பமரங்கள் சாய்ந்து மின் கம்பி மீது விழுந்தன. இதனால், மின் விநியோகம் துண்டிக்கபட்டது. சாலையோரக் கடைகள் சூறைக் காற்றில் தூக்கி வீசப்பட்டன. கிராமங்களில் பல வீடுகளின் மேல்கூரைகள் பலத்த காற்றில் தூக்கி வீசப்பட்டன. கல்லூரில் விவசாயி மோகனுக்குச் சொந்தமான விளைநிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 2 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன. அதே பகுதியைச் சேர்ந்த குமார், கணேசன் ஆகியோரின் கோழிப் பண்ணைகளில் ஏராளமான கோழிக் குஞ்சுகள் உயிரிழந்தன. சேலம்- திருப்பத்தூர் சாலையில் 10-க்கும் மேற்பட்ட புளியமரங்கள் வேரோடு சாய்ந்தன. ஊத்தங்கரையிலுள்ள தெப்பக்குளத்தின் சுற்றுச் சுவர் சேதமடைந்தது. மேலும், பல ஆண்டுகளுக்கு பிறகு ஊத்தங்கரையில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதைக் கண்டு மகிழ்ந்த மக்கள் ஆலங்கட்டிகளை சேகரித்தனர். ஊத்தங்கரை பகுதியில் 129 மி.மீ. மழை பதிவானது
0 கருத்துகள்:
Post a Comment