Search This Blog n

20 August 2013

இந்தியா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை!!.


எல்லையில் தாக்குதல் நடவடிக்கை தொடர்ந்தால் பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய ராணுவ காலாட்படை பிரிவின் மேஜர் ஜெனரல் வி.பி.சிங் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். காஷ்மீர் மாநிலம் ரஜௌரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியது: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவது உள்பட்ட பல்வேறு மிகப்பெரிய தவறுகளை பாகிஸ்தான் தொடர்ந்து செய்து வருகிறது. இதுபோன்ற செய்கைகளால் இந்தியாவை எந்த வகையில் பலவீனப்படுத்தி விடவோ, அச்சுறுத்தவோ முடியாது.

இனிமேலும் எல்லையில் தாக்குதல் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டால் உரிய பதிலடி கொடுக்கப்படும். எப்போது தாக்குவது, எந்த இடத்தை தாக்குவது என்பதை நாங்கள் முடிவு செய்வோம். இந்த நடவடிக்கை இந்தியா ராணுவத்தின் பலத்தை உணர்த்துவதாக அமையும். எல்லையில் இனி மேலும் தாக்குதல் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டால், முழு பலத்துடன் உரிய பதில் நடவடிக்கை எடுக்கலாம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சரும், ராணுவத்தின் உயர் அதிகாரிகளும் ஒப்புதல் அளித்துள்ளனர் என்றார் அவர்.
இதனிடையே இந்திய எல்லைப் பகுதியில் தொடர் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள 120 பட்டாலியன் படைப்பிரிவின் காமாண்டர் எ. சென்குப்தா இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியது: ஜனவரி மாதத்தில் இரு ராணுவ வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதும் இப்போது பூஞ்ச் பகுதியில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதும் பாகிஸ்தானின் சிறப்புப் படை மற்றும் பயங்கரவாதிகள் இணைந்து நடத்தியது என இந்தியா குற்றம்சாட்டியது. இதன் பிறகும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்த மீறல் அதிகரித்துள்ளது.
இந்தப்பகுதியில் இதுவரை எந்த தாக்குதலையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை என்றாலும், அவர்கள் நமது பாதுகாப்பு அரண்கள் மீது தாக்குதல் நடத்துவது என எதையாவது செய்வார்கள். ஆனால், நாங்கள் எவ்வித தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்.கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை 70 முறை போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் துருப்புகள் மீறியுள்ளன. இது கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களைவிட 85 சதவீதத்துக்கும் அதிகம்.
2003ம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு கடந்த வாரங்களில் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகமாகியுள்ளது.கடந்த 9 நாள்களும் இடைவெளியின்றி போர்நிறுத்த ஒப்பந்த மீறல்கள் குறித்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் துருப்புகளின் அத்துமீறிய தாக்குதல்களால் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 5 ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் காயமடைந்துள்ளனர். எல்லைப்பகுதியில் இந்திய ராணுவ நிலைகள் மீது மட்டுமின்றி ரோந்துப் படையினர், மக்கள் வாழும் பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்துகின்றனர்.கடந்த இருநாள்களாக இந்திய ராணுவ பாதுகாப்பு அரண்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதோடு மட்டுமில்லாமல் குண்டுகள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டும் தாக்குதல் நடத்துகின்றனர்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மதிப்பதில்லை. ஒப்பந்தத்தை மீறி நாள்தோறும் நம்மீது தாக்குதல் நடத்துகிறது. ஆனால், இந்திய துருப்புகள் எப்போதும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதில்லை. அவர்கள் ஆத்திரமூட்டும் செயல்களை செய்தாலும் நாம் கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருகிறோம். பாகிஸ்தான் துருப்புகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நமது பாதுகாப்பு அரண்களை எந்நேரமும் விழிப்புடன் கண்காணித்து வருகிறோம். எல்லைக்கு அப்பாலிருந்து வரும் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்க நமது வீரர்கள் தயாராக உள்ளனர். நாம் ஏற்கெனவே அம்மாதிரியான பதிலடியை இப்பகுதியில் கொடுத்திருக்கிறோம். இதில் அவர்களது 5 பாதுகாப்பு அரண்கள் சேதமடைந்துள்ளன.
அதிகாரிகள் உறுதியாக கூறினால் அதிக திறன் வாய்ந்த நவீன ஆயுதங்களால் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தயாராக உள்ளோம். எந்த காரணமும் இல்லாமல் உயிரிழப்பு ஏற்படுத்தும் நோக்கத்துடன் கடந்த ஒரு வாரமாக நம்மீது தாக்குதல் நடத்துகின்றனர். எல்லைக்கு அப்பால் 200-300 பயங்கரவாதிகள் ஊடுருவலுக்கு தயாராக உள்ளனர். அவர்களின் ஊருருவல் முயற்சி தோல்வியடைந்ததால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தப்படுகிறது. பாகிஸ்தானின் இந்நடவடிக்கை 2003-ல் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு முந்தைய காலத்துக்கு நம்மை கொண்டு செல்லும் என நம் ராணுவ வீரர்கள் எண்ணுகின்றனர். நம்முடைய உத்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும். தற்போதைய பாகிஸ்தான் துருப்புகளின் நடவடிக்கைகள் எல்லையில் அமைதியை முடிவுக்கு கொண்டுவரும் நிலையை ஏற்படுத்தி உள்ளன.என்றார் சென்குப்தா.

0 கருத்துகள்:

Post a Comment