Search This Blog n

07 August 2013

இலங்கையுடன் தூதரக ரீதியில் பேச்சு நடத்துங்கள்


 
இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தையைத் தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
 இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

 ""இலங்கை சிறைகளில் வாடும் 70 தமிழக மீனவர்களின் நிலை பற்றி தங்களுக்கு நான்கு முறை கடிதங்களை எழுதியிருந்தேன். அவர்களை உடனடியாக விடுவிக்க உயர்நிலையில் ராஜதந்திர அளவில் நடவடிக்கை எடுக்க தாங்கள் நேரடியாக தலையிட வேண்டுமென்றும் கேட்டிருந்தேன்.

 ஆனால் தமிழக மீனவர்களை மீட்க இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் அவர்கள் இன்னும் இலங்கைச் சிறையில் வாடுகிறார்கள். இந்த 70 மீனவர்களும் இலங்கைச் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், மற்றொரு மோசமான சம்பவம் கடந்த 3 ஆம் தேதி நடந்துள்ளது.

 அதாவது ராமேசுவரத்தைச் சேர்ந்த மேலும் 20 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடத்திச் சென்றுள்ளனர். இது கடந்த ஒரு மாத காலத்தில் நடந்துள்ள மூன்றாவது சம்பவமாகும். அந்த 20 மீனவர்களும் ராமேசுவரத்தில் இருந்து ஐந்து இயந்திர படகுகளில் கடந்த 3 ஆம் தேதியன்று மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்களை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். பின்னர் தலைமன்னாருக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். அதன் பின், கடந்த 4-ஆம் தேதியன்று சிறையில் அடைத்துள்ளனர்.

 இன்னல்கள் தொடர்கின்றன: மீனவர்கள் பிரச்னை தொடர்பாக மத்திய அரசு எந்தவித அக்கறையும் செலுத்தாமல் இருப்பதால்தான் ஒன்றும் அறியாத அப்பாவித் தமிழக மீனவர்களுக்கு இதுபோன்ற இன்னல்கள் தொடர்கின்றன. அதனால்தான் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கடத்தித் தாக்கி துன்புறுத்தி கைது செய்கின்றனர். இதுபற்றி அடிக்கடி தங்களுக்கு கடிதங்களை எழுதியிருக்கிறேன்.

 மத்திய அரசின் பலவீனமான பதில் அளிப்பின் காரணமாக இந்திய மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்களை இலங்கை கடற்படையினர் நடத்துகின்றனர். மேலும் நாம் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் இல்லாமல் தாக்குதல் நடத்துகின்றனர்.

 இலங்கை அரசானது தமிழக மீனவர்களை கடத்துவது, கைது செய்வது, சிறையில் அடைப்பது போன்ற சம்பவங்களால் தமிழக மீனவர்கள் மத்தியில் பதற்றமும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மட்டுமல்லாது, மீனவர்கள் என்ற போர்வையில் வரும் அந்த நாட்டு சமூக விரோதிகளாலும் தாக்கப்படுகிறார்கள்.

 இந்த நிலையில், இலங்கை அரசு இந்திய அரசின் மீது ஒரு மனக் கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது, இக்கட்டான நேரத்தில் இலங்கை அரசை இந்திய அரசு கைவிட்டு விட்டதென்றும் இலங்கையின் நலனில் இந்திய அரசுக்கு அக்கறை இல்லையென்றும் குறை கூறியுள்ளது.

 இதுபோன்ற தொடர் தாக்குதல்கள், கடத்தல்கள் மற்றும் சட்ட விரோதமாக சிறை வைப்பது போன்ற நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு பகை நாடு செய்யும் செயல்களாகவே கருதப்பட வேண்டும். இதற்கு நமது நாடும் சரியான பதில் கொடுக்க வேண்டும்.

 ராஜதந்திர ரீதியில் கடும் நிர்பந்தம் செய்ய வேண்டும். அத்துடன் இதுபோன்ற செயல்களை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என மிகக் கடுமையாக எச்சரிக்கை வேண்டும்.

 இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள இந்திய தூதர் இதை இலங்கை அரசிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அத்துடன் இப்போது இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 90 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 தமிழக மீனவர்கள் மீதான கொடுமைகளும், கைதுகளும் இனியாவது நடக்காமல் தடுப்பதற்காக இலங்கை அரசுடன் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும்.

 தமிழக மீனவர்கள் பெரும்பாலும் பாக்ஜல சந்தி பகுதியில்தான் தாக்கப்படுகிறார்கள். இந்தப் பகுதியில் தான் அவர்கள் காலங்காலமாக மீன்பிடித்து வருகிறார்கள். ஆகவே இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்

0 கருத்துகள்:

Post a Comment