பருவமழை பொய்த்து விட்டதால் தமிழ்நாட்டுக்கு மேலும் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் கர்நாடகம் தெரிவித்தது.
கண்காணிப்பு குழு கூட்டம்
காவிரி கண்காணிப்பு குழுவின் 5–வது கூட்டம் அதன் தலைவரும், மத்திய நீர்வளத்துறை செயலாளருமான சசிசேகர் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், பொதுப்பணித்துறை செயலாளர் பழனியப்பன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவரும், மேலாண்மை இயக்குனருமான டாக்டர் சாய்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கர்நாடக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் கவுசிக் முகர்ஜி, நீர்வளத்துறை செயலாளர் பி.வி.ராமமூர்த்தி, கேரள அரசின் சார்பில் நீர்வளத்துறை பொறியாளர் பி.ஜே.குரியன் மற்றும் புதுச்சேரி அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு கோரிக்கை
இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் வருமாறு:–
காவிரியில் கர்நாடகம் போதிய அளவு தண்ணீர் திறந்து விடாததால் சம்பா பருவ பயிர் பாதிக்கப்பட்டு உள்ளது. செப்டம்பர் மாதம் 24–ந் தேதி நிலவரப்படி கர்நாடகம் 47.549 டி.எம்.சி. தண்ணீர் பாக்கி வைத்து உள்ளது. அந்த பாக்கியை கர்நாடகம் பூர்த்தி செய்ய வேண்டும்.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் கூறியபடி அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் தமிழகத்துக்கு பிலிகுண்டுலு பகுதிக்கு வந்து சேரவேண்டிய 48 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும்.
கூடுதலாக பயன்படுத்திய கர்நாடகம்
2014–2015–ம் ஆண்டில் கர்நாடகம் 103 டி.எம்.சி. நீரைத்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் கூடுதலாக 37 டி.எம்.சி. தண்ணீரை பயன்படுத்தி இருக்கிறது.
கர்நாடக அணைகளுக்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது? அதில் எவ்வளவு தண்ணீரை கர்நாடகம் பயன்படுத்துகிறது? அதன் மூலம் எவ்வளவு நிலப்பரப்பில் பாசனம் செய்கிறது? என்ற விவரங்களை கண்காணிக்க ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். கோடைகால பாசனத்துக்கு கர்நாடகம் தண்ணீர் எடுக்காமல் இருப்பதை கண்காணிப்பு குழு உறுதி செய்ய வேண்டும். மீதம் இருக்கும் தண்ணீரை அடுத்த பாசனத்துக்கு பகிர்ந்து கொள்ளுமாறு
கர்நாடகத்தை வற்புறுத்தவேண்டும்.
கடந்த 2013–ம் ஆண்டு மே 10–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் அளித்த உத்தரவாதத்தின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்குமுறை குழுவையும் மத்திய அரசு தாமதம் இன்றி அமைக்க வேண்டும்.
மேற்கண்ட கருத்துகள் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டன.
தண்ணீர் திறந்துவிட முடியாது
ஆனால், கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடக அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட இயலாது என்று கூறினார்கள்.
கூட்டத்தில் அவர்கள் பேசுகையில் கூறியதாவது:–
பருவமழை பொய்த்ததால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது. இந்த ஆண்டில் 67 சதவீதம் தான் மழை பெய்துள்ளது. 33 சதவீதம் மழை பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் காவிரி பாசன பகுதிகளில் கடுமையான வறட்சி
நிலவுகிறது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். எங்களால் இயன்றவரை தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டு இருக்கிறோம். ஏற்கனவே செப்டம்பர் 26–ந் தேதி வரை தமிழகத்துக்கு 82.3 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு கோரும் தண்ணீர் அளவை திறந்து விட முடியாது.
பருவமழை பொய்த்ததன் காரணமாக வழக்கமான நடைமுறையின்படி தண்ணீர் திறந்து விட முடியாத நிலை இருப்பதால், நெருக்கடி கால சூழ்நிலையின்படி தண்ணீரை பகிர்ந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மத்திய அரசு யோசனை
மத்திய அரசின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் பேசுகையில், பற்றாக்குறை சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதால் கர்நாடகம்–தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் தண்ணீரை பகிர்ந்துகொள்வதில் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என்று யோசனை தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
Post a Comment