பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை தாம்பரம் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண் ஒருவர் விட்டுச்சென்று விட்டார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
ஆதரவற்றோர் இல்லம்
சென்னையை அடுத்த தாம்பரம் லோகநாதன் தெருவில் ‘குட்லைப் சென்டர்’ என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. இங்கு ஆதரவற்ற குழந்தைகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். பாஸ்கர் என்பவர் இந்த ஆதரவற்றோர் இல்லத்தை நடத்தி வருகிறார்.
நேற்று காலை 7.30 மணியளவில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையுடன் அங்கு வந்தார். அவரிடம் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த பெண் ஊழியர்கள் விசாரித்தனர்.
காதலித்து கர்ப்பம்
அப்போது அந்த பெண், ‘‘எனது மகள் பிளஸ்–2 படித்து வருகிறாள். ஒரு வாலிபரை அவள் காதலித்து வந்தாள். இதில் அவள் கர்ப்பம் அடைந்தாள். நாங்கள் வெளியே தெரியாமல் அவளை ரகசியமாக வைத்து இருந்தோம். இந்த குழந்தை அவளுக்கு பிறந்ததுதான். அந்த குழந்தையை நாங்கள் வளர்க்க விரும்பவில்லை. எனவே உங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் விட்டுச்செல்ல வந்தேன்’’ என்றார்.
அதற்கு பெண் ஊழியர்கள், அந்த குழந்தையை வாங்க மறுத்தனர். அந்த குழந்தைக்கு முறைப்படி மருத்துவ பரிசோதனை பெற்று சான்றிதழ் கொடுக்க வேண்டும். உங்களை பற்றிய விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
குழந்தையை விட்டுச்சென்றார்
இதையடுத்து அந்த பெண், அந்த பச்சிளம் குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் விட்டு விட்டு, சிறிது நேரத்தில் மருத்துவ சான்றிதழுடன் வருவதாக கூறிச்சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி பாஸ்கர், இதுபற்றி தாம்பரம் போலீசில் புகார் செய்தார். இதுபற்றி குழந்தைகள் நல மையத்துக்கும் தகவல் தெரிவிக்ப்பட்டது.
இதுபற்றி ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி பாஸ்கர் கூறும்போது, ‘‘அந்த பெண் விட்டுச்சென்ற பச்சிளம் ஆண் குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்தோம். குழந்தை நல்ல ஆரோக்யமாக உள்ளது. 2½ கிலோ எடை உள்ளது. அந்த குழந்தையை விட்டுச்சென்ற பெண் யார்?, அந்த
குழந்தை யாருக்கு பிறந்தது? என்பது தெரியவில்லை. அது தனது மகளுக்கு பிறந்ததாக அவர் கூறியது உண்மையா? என்பதும் தெரியவில்லை. அந்த குழந்தையை செங்கல்பட்டில் உள்ள அரசு குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைப்போம்’’ என்றார்
0 கருத்துகள்:
Post a Comment