கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன கருவிகளுடன் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு
வசதிகளை மேம்படுத்தும் வகையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு, சிறுநீரகவியல் பிரிவு, நரம்பியல் பிரிவு கட்டிடம் கட்டப்பட்டது.
இந்த கட்டிடத்தை நேற்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ஆர்.நாராயணபாபு மருத்துவமனை டாக்டர்கள்,
செவிலியர்கள், நோயாளிகளை பார்க்க வந்த உறவினர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தீவிர சிகிச்சைப்பிரிவு
குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு முற்றிலும் அதிநவீன கருவிகள் மற்றும் உயர்தரத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், சிறுநீரகவியல் பிரிவு, நரம்பியல் பிரிவும்
தொடங்கப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப்பிரிவில் 10 படுக்கை வசதிகளுடன், இருதய பரிசோதனை, வயிறு பரிசோதனை, எக்ஸ்ரே, கண்காணிக்கும் கருவி, ரத்த பரிசோதனை என அனைத்தும் ஒரே இடத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், குழந்தைகளுக்கான சிறுநீரகவியல் பிரிவு, நரம்பியல் பிரிவில் தலா 25 படுக்கைவசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனை பிரிவுகளில் ஒரு மாதம் முதல் 13 வயது குழந்தைகளுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படும்.
முடநீக்கியல் துறை
4 தலைமை டாக்டர்கள், 7 டாக்டர்கள் மற்றும் மருத்துவ மேற்படிப்பு பயிற்சி மருத்துவர்கள் என பலர் பணியில் ஈடுபட உள்ளனர். சிங்கப்பூர், லண்டன் போன்ற இடங்களில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மாதிரி தான் இங்கு கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மருத்துவமனை 9–ந் தேதி (புதன்கிழமை) முதல் செயல்பாட்டுக்கு வரும். அதுமட்டும்மில்லாமல், முடநீக்கியல் துறைக்கு என கட்டிடம் இல்லாமல் இருந்தது. தற்போது 20 படுக்கை வசதிகளுடன் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment