சென்னையை தூய்மைப்படுத்தும் பணியில் கடந்த 10 நாட்களில் 1 லட்சம் டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளது. ஓரிரு நாட்களில் பணிகள் நிறைவு பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தூய்மைப்படுத்தும் பணி
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, சென்னையில் மழை வெள்ள நிவாரண பணிகள் மற்றும் சுகாதார பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. திடக்கழிவு மேலாண்மைத்துறையும், பொது சுகாதாரத்துறையும் இணைந்து போர்க் கால அடிப்படையில் அனைத்து
பணிகளையும் செய்து
வருகிறது. 18 ஆயிரத்து 947 மாநகராட்சி பணியாளர்கள், இதர மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 45 பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.
கடந்த 7-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 1 லட்சத்து 9 ஆயிரத்து 672.09 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. இந்த பணியில் 25,992 பணியாளர் கள் ஈடுபடுத்தப்பட்டு இரவு பகலாக வேலை நடந்து வருகிறது. இரவு நேரங்களில் வேலை செய் வதற்கு வசதியாக நடமாடும் தெரு
விளக்குகள்
அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிக்காக சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 404 லாரிகளும், தனியார் மூலமாக 397 லாரிகளும், 141 ஜே.சி.பி எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வந்தன.
7,830 மருத்துவ முகாம்கள்
மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மூலம் 7 ஆயிரத்து 830 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 13 லட்சத்து 11 ஆயிரத்து 8 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். கூடுதலாக 1,000 டன் பிளீச்சிங் பவுடர் வரவழைக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தெளித்தல் மற்றும் வீடுதோறும் ½ கிலோ பிளீச்சிங் பவுடர் வழங்கும் பணியும் தொடர்ந்து
நடைபெற்று வருகிறது.
துப்புரவு பணியாளர்கள் அந்தந்த மண்டலங்களில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசிய தேவைகள் அந்தந்த மண்டல அதிகாரிகளால் செய்து தரப்பட்டு வருகிறது. நகரை தூய்மைப்படுத்தும் பணி இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) ஆர்.கண்ணன் கூறியதாவது:-
திருப்தி அளிக்கிறது
சென்னை நகர் முழுவதும் சுத்தம் செய்யும் பணிகளுடன், தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையால் சேர்ந்த கழிவுகள் முழுமையாக நீக்கப்பட்டுவிட்டது. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு பொருட்களை அகற்றும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. எலக்ட்ரானிக் பொருட் கள், உடமைகள் உள்ளிட்ட கழிவுகள் தேங்காமல் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது.
இன்னும் ஒரு சில நாட்களில் இந்த பணிகள் முழுமையடையும். துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் எல்லா உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம். அரசியல் தலையீடு இல்லாமல் பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு திருப்தி அளித்ததாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாகவே மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கணக்கெடுப்பு பணி
இதேபோல வெள்ள சேதங் களை கண்டறியும் பணியும் முடியும் நிலையினை எட்டியுள்ளது. வடகிழக்கு பருவமழையினால் சென்னை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங் களை கண்டறிய, 21 மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரம் அலுவலர் கள், வெள்ள நிவாரண கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
கண்காணிப்பு பணியிலும் 21 மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் துணை கலெக்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 10 வட்டங்களில் இந்த கணக்கெடுக்கும் பணிகளை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த கணக்கெடுப்பு பணி ஓரிரு நாட்களில் இறுதிக்கட்டத்தை எட்டிவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து கணக்கெடுப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இறுதி அறிக்கை
ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்களை கணக்கெடுப்பு அலுவலர்கள் சேகரித்து வருகின்றனர். வெள்ளத்தால் சேதமடைந்த ஆவணங்கள் பற்றி குறிப்பெடுத்து கொள்ளப்படுகிறது. பதிவின் போது வீட்டில் இல்லாதவர்களுக்காக ‘மறு கணக்கீடு’ முறையும் நடத்தப்படுகிறது.
பெரும்பாலான பகுதிகளில் குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை இல்லை என்று குறிப்பெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வில்லிவாக்கம் (மண்டலம்-8) உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் வேகமாக முடிந்துவிட்டன. இந்த குறிப்புகள்
முறையாக
தகவல் தொகுப்பு மையங்கள் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் உதவியுடன் இந்த கணக்கெடுப்பு பணி 80 சதவீதம் வரை முடிந்து விட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி அறிக்கை தயார் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment