Search This Blog n

10 December 2015

புராதன சின்னங்களை பாதுகாக்க தனிச்சட்டம் இல்லையே? ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை

தொன்மையான நாகரீகம், பழமையான கட்டிடங்கள் பல இந்தியாவில் இருந்தும், இவற்றை பாதுகாக்க தனிச்சட்டம் இதுவரை உருவாக்கப்படவில்லையே? என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 
குழு அமைப்பு 
தமிழகத்தில் புராதன சின்னங்களை முறையாக பராமரிக்க நிபுணர் குழுக்களை அமைக்கவில்லை என்று பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
பின்னர், தமிழகத்தில் உள்ள கோவில்கள், புராதன சின்னங்கள் ஆகியவற்றின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் தலைமையில் ஒரு குழுவை ஐகோர்ட்டு நியமித்தது. இந்த குழுவும், சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள கோவில்களை ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்தது. 
அபசகுனம் கோவில்கள் 
அதேபோல நாமக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 400 ஆண்டு பழமையான கோவில்களை, அபசகுனம் என்று கூறி இடிக்கப்படுவதாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கையும் ஐகோர்ட்டு சேர்த்து விசாரித்தது. அபசகுனம் என்று சொல்லி கோவில்களை இடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. 
இந்த நிலையில், இந்த 2 வழக்குகளும் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. 
அபாயம் ள்ளது
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் தலைமையிலான குழு தாக்கல் செய்துள்ள அறிக்கைகளை பார்க்கும்போது, புனரமைப்பு என்ற பெயரில் கோயில்களில் கட்டிட பணிகளை மேற்கொள்ள அனுமதித்தால், புராதன சின்னங்கள் பல அழிந்துவிடும் அபாயம் உள்ளது. மேலும், இதுபோன்ற புனரமைப்பு பணிகளை மேற்பார்வையிட்டு, அறிவுரை கூற நிபுணத்துவம் பெற்றவர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை. 
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் நாகசுவாமி, அரசுக்கு பல பரிந்துரைகளை அனுப்பியுள்ளார். 
வண்ணங்கள் சேதம் 
அதில், ‘பாரம்பரியமான, தொன்மையான கோவில்கள் பராமரிப்பில் பயிற்சி பெற்ற என்ஜினீயர்களை கொண்ட குழு அமைக்கவேண்டும். கோவில்கள் புனரமைப்பின்போது அங்குள்ள சுவர்கள், தூண்களில் உள்ள வண்ணங்களும், எழுத்துகளும் சேதம் அடைகின்றன. அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறியுள்ளார். 
இவரது பரிந்துரைகளை அரசு அதிகாரிகள் பரிசீலிக்கவேண்டும். இந்த புராதன சின்னங்களை பராமரிக்க ஐ.ஐ.டி., யுனஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த நிபுணர்களின் உதவிகளையும், அறிவுரைகளையும் பெறவேண்டும்.
எனவே, இந்த நிபுணர்கள் மூலம் புராதன சின்னங்கள், தொன்மையான கோவில்கள், கட்டிடங்கள், கட்டமைப்புகள் ஆகியவற்றை உரிய முறையில் புனரமைத்துப் பாதுகாக்க வழிமுறைகளை உருவாக்கவேண்டும். அதுவரை புனரமைப்பு பணிகளில் அவசரமான பணிகளை மட்டும் மேற்கொள்ளலாம். மற்ற பணிகள் எதையும் மேற்கொள்ளக்கூடாது. அரியவகை புராதன சின்னங்களுக்கு சேதம் ஏற்படுத்தக்கூடாது. 
சட்டம் இல்லயே?
புராதனக் கோவில்களைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையம் ஒன்றை உருவாக்க 2009-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. அதேநேரம், புராதன கோவில்கள், கட்டிடங்களைப் பாதுகாப்பதற்கான தனிச்சட்டம் இதுவரை உருவாக்கப்படவில்லை.
தொன்மையான நாகரீகம், பழமையான கட்டிடங்கள் பல இந்தியாவில் உள்ளன. இவையெல்லாம் புராதன சின்னங்கள் என்று யுனஸ்கோ அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு 38 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை இந்த புராதன சின்னங்களை பாதுகாக்க தனிச்சட்டம் இந்தியாவில் இல்லையே? என்பது வேதனைக்குரியது. இந்த வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 25-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

Post a Comment