Search This Blog n

22 December 2015

யார் காந்தியாரைக் கொன்றவன் அசல் ஆர்.எஸ்.எஸ்...இல்லையா ???


காந்தியாரைக் கொன்றவன் அசல் ஆர்.எஸ்.எஸ்.காரனே என்பது உலகத்திற்கே தெரியும். ஆனால், பி.ஜே.பி.க்காரர்கள் ஒன்றைத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நீதிமன்றமே சொல்லி விட்டது. நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரரல்ல என்று; அதற்குப் பிறகும் கோட்சேவை ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லுவது நியாயம் தானா? என்று பெரிய புத்திசாலிகள் போலவும், கேள்வி கேட்ட வர்களை மடக்கி விட்டது போலவும் சட்டையின் கழுத்துப் பட்டையைச் சற்றுத் தூக்கி விட்டு நடை போடுகிறார்கள்.
காந்தியாரைக் கொன்றவன் ஆர்.எஸ்.எஸ். என்று காங்கிரஸ் துணைத் தலைவர் கூறிவிட்டாராம். அதனால் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு மானம் கப்பலேறி விட்டதாம்.
பிஜேபி என்ன செய்தது? ஆர்.எஸ்.எஸ்.மீது  காந்தி கொலைக் குற்றத்தை சுமத்தி, அதன்மூலம் ராகுல் காந்தி அரசியல் செய்ய இருக்கிறார் என்று புகார் செய்தது.
நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லையென்றால் அவன் எந்த அமைப்பைத்தான் சேர்ந்தவன் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு ஆர்.எஸ்.எஸ். தரப்பில் என்ன பதில் கூறப்பட்டது? கோட்சே இந்து மகாசபை என்கிற அமைப்பைச் சேர்ந்தவன் என்று பதில் வந்தது.
ஆர்.எஸ்.எசுக்கும் - இந்து மகாசபைக்கும் அப்படி என்ன சித்தாந்த வேறுபாடு - கருத்து மாறுபாடு? இன்னொரு கட்டத்தில் இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்தும் விட்டன என்கிறபோது காந்தியைச் சுட்டுக் கொன்றதற்கான பொறுப்பை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்? அதில் ஏன் நழுவல்? அறிவு நாணயமற்ற தன்மையே தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.
நீதிமன்றம் சொல்லுவது ஒருபுறம் இருக்கட்டும்; நாதுராம் கோட்சேயின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதுதானே முக்கியம்? காந்தியார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே நாதுராம் கோட்சேயின் சாட்சாத் தம்பிதான்; அந்தத் தம்பி என்ன சொல்லுகிறான்?
இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த ஃப்ரண்ட்லைன் இதழ் கோபால் கோட்சேயைப் பேட்டி கண்டு பகிரங்கமாக உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து விட்டதே. சங்பரிவார்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளவில்லையே ஏன்?
கேள்வி: நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸில்தான் இருந்தாரா? அதைவிட்டு வெளியேறிடவில்லையா?
பதில்: ஆர்.எஸ்.எஸில் நாதுராம் கோட்சே ஒரு பவிதி காரியலா (அறிவுப் பூர்வப் பணியாளர்) ஆக இருந்தார். நாதுராம் ஆர்.எஸ்.எசை விட்டு விலகியதாக (காந்தியார் கொலை வழக்கின்போது நாதுராம் கோட்சே அளித்த அறிக்கையில்) குறிப்பிட்டு இருந்தார். காந்தியார் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எசுக்கும், கோல்வாக்கருக்கும், நெருக்கடிகள், பிரச்சினைகள் ஏற்பட்டதன் காரணமாக அவர் அப்படிக் குறிப்பிட நேர்ந்தது. ஆனால், உண்மையில் நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எசை விட்டு விலகவேயில்லை (ஃப்ரண்ட்லைன் 28.1.1944)
இதே இதழில் இன்னொன்று ஆர்.எஸ்.எசுக்கும் நாதுராம் கோட்சேவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அத்வானி கூறி இருக்கிறாரே? என்ற கேள்விக்கு கோபால் கோட்சே பதில் என்ன தெரியுமா?
இது கோழைத்தனமானது -அவரது கூற்றை நான் மறுக்கிறேன் போ, காந்தியைக் கொல்லு! என்று ஆர்.எஸ்.எஸ். தீர்மானம் போடவில்லை என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால், நாதுராம் கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எசுக்கும் சம்பந்தம் இல்லை என்று நீங்கள் கூற முடியாது என்று அதே பேட்டியில் காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேயின் தம்பியும், காந்தியார் படுகொலையில் ஆயுள் தண்டனை பெற்று இடையில் விடுதலை பெற்றவருமான கோபால் கோட்சே வெட்டொன்று துண்டு இரண்டாக அப்பட்டமாகச் சொன்ன பிறகும், நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லை என்று கூறுவது அப்பட்டமாகப் பொய்ச் சொல்லுவதில் ஆர்.எஸ்.எசை வென்றிட உலக அரங்கில் யாருமே கிடையாது என்பதைத்தான் காட்டுகிறது.
இதில் இன்னொரு சூழ்ச்சியும், ஏமாற்றுத்தனமும் உண்டு - அதனைக் கவனிக்கத் தவறக் கூடாது. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் சேர்க்கை கிடையாது. அதனால் உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ்.காரராக இருக்கும் எவரையும் ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லுவதற்கான ஆதாரம் கிடையாது. குற்றம் செய்து விட்டு, அதிலிருந்து ஆர்.எஸ்.எசைத் தப்பிக்கச் செய்ய ஆர்.எஸ்.எஸ்.செய்து வைத்திருக்கும் தந்திரமும், சூழ்ச்சியும் இதுவாகும்.
நீதிமன்றம் நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லை என்று சொல்லி விட்டது. எனவே அவனை ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லாதீர்கள் என்கிறார்களே - அவர்களின் கனிவான பார்வைக்கு இதோ ஒரு நீதிமன்ற தீர்ப்பு. பஞ்சாப்  அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் குரோவர் வழங்கிய தீர்ப்புதான் (மே 2015).
இந்தியா டுடே ஏட்டின் முதன்மை ஆசிரியர்,  வெளியீட்டாளர் ஆகியோர் மீது அவமதிப்பு வழக்கு ஒன்றினை முகேஷ் கார்க் என்பவர் 2004 இல் தொடர்ந் திருந்தார். இதனை ஏற்று, மேற்கண்ட மூன்றுபேர்களுக்கும் அழைப்பாணை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து பத்திரிகையாளர் மூவரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பத்திரிகையாளர்களுக்காக மூத்த வழக்குரைஞர் ஆர்.எஸ்.சீமா வாதாடினார். செய்திக்கட்டுரை அவமதிப்பானது எனக் கருத முடியாது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை குறைகூறி எதுவும் எழுதப்பட வில்லை என வழக்குரைஞர் கூறியதை நீதிபதி மகேஷ் குரோவர் ஏற்று கொண்டார்.
கட்டுரையைப் படித்துப் பார்த்தால் நாதுராம் கோட்சேயை ஆர்.எஸ். எஸ்.காரர் என எழுதியிருக்கிறார்கள்; ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்து தேசிய இயக்கம் எனவும் எழுதியிருக்கிறார்கள். வரலாறும் வரலாற்றில் இடம் பெற்றவர்களும் உயர்ந்து நின்றாலும் பிற்காலத்தவர்களால் புரிந்து கொள்ள முடியாத வர்களாக இருப்பர். அந்த வகையில் கோட்சேயைப் பற்றிய பின்புல ஆய்வு செய்து எதனால் நாட்டின் தந்தையான காந்தியாரைக் கொலை செய்தார் என்பதையும் ஆய்வது வழக்கமானதே. அப்படி ஆராயும்போது, அவரும் அவர் சார்ந்திருந்த இயக்கத்தினைப் பற்றியும் குறிப்புரைகள் எழுதப் பட்டுள்ளன என நீதிபதி குறிப்பிட்டார். ஆர்.எஸ்.எஸின் உறுப்பினர் என்னும் முறையில் கோட்சே பற்றி எழுதப்பட் டதை அவமரியாதையானது என்றோ, அவமதிப்பானது என்றோ கருத முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதி வழக்கையும் பத்திரிக் கையாளர்களுக்கு வழங்கப்படட அழைப்பாணையையும் ரத்து செய்து ஆணையிட்டார்.
ஒரு கட்டுரையை முழுமையாகப் படித்துப் பார்க்க வேண்டும். இந்தக் கட்டுரை சாதாரண வாசகரின் மனதில் எம்மாதிரி எண்ணங்களைத் தோற்று விக்கும் என்பதை ஆயும் கடமை நீதிமன்றத்துக்கு உண்டு. போலித்தனமான ஆள்கள் தம் குருட்டுக் கண்களால் பார்த்தால் மட்டுமே இக்கட்டுரை அவ தூறானது எனக் கூறுவார்கள் என்று மிகக் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவும் நீதிமன்ற தீர்ப்புதான். ஆர்.எஸ்.எஸ். என்று நாதுராம் கோட்சேயைக் கூறாதீர்கள் என்பவர்களின் வாய்கள் இதற்குப் பிறகாவது 
அடைபடட்டும்!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment