சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வியாழக்கிழமை இரவிலிருந்து பெய்துவரும் கடும் மழையின் காரணமாக, நகரின் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை நகரில் நேற்று இரவிலிருந்து மழை தொடர்ச்சியாக பெய்துவருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல ஓடுவதால், போக்குவரத்து கடுமையாக
பாதிக்கப்பட்டு உள்ளது.
இரவு முழுவதும் பெய்த மழையின் காரணமாக, ரயில் பாதைகளின் கீழுள்ள பல சுரங்கப் பாதைகள் மழையில் மூழ்கியுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் மழை பெய்துவருவதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, வேலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது தென் கிழக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருப்பதால், தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழையோ, மிக கன மழையோ பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திலேயே அதிக பட்சமாக காஞ்சிபுரத்தில் 34 செ.மீ. மழை பெய்துள்ளது. புழல், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் 21 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கவரப் பாளையத்தில் உள்ள ஏரி நிரம்பி, உடைந்திருப்பதால் சென்னை – திருவள்ளூர் இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் ஏரி நிரம்பி, அந்த ஏரி தற்போது திறந்துவிடப்பட்டுள்ளதால் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அணையும் நிரம்பியுள்ளது.
இதற்கிடையில் மழையால் பாதிக்கப்பட்டிருந்த கடலூர் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்குப் பிறகு இன்று பள்ளிக்கூடங்கள்
திறக்கப்பட்டிருக்கின்றன.
0 கருத்துகள்:
Post a Comment