Search This Blog n

13 March 2013

இலங்கை - இந்தியா - அமெரிக்கா கூட்டுச் சதி! -


ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்படும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குரல் முழக்கம் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது. அதே நேரத்தில், 'இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் உப்புசப்​பில்லாத தீர்மானத்தால் எந்தப் பலனும் இல்லை’ என்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்.
கேள்வி: அமெரிக்கா கொண்டு​வரும் தீர்மானம் தமிழர்களின் கோரிக்கைக்கு வலுசேர்க்குமா?

பதில்:  ராஜபக்ச அரசுக்கு எதிராக ஐ.நா. சபையின் மனித உரிமை​கள் ஆணையக் கூட்டத்தில் கடந்த ஆண்டு அமெரிக்கா நிறைவேற்றிய தீர்மானத்தால் என்ன நடந்துவிட்டது? போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரை​களை நிறைவேற்ற வேண்டும், போர்க் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் தண்டிக்க வேண்டும் என்பதெல்லாம் என்ன ஆனது?
இந்தத் தீர்மானம் நிறைவேறிய பிறகும், தமிழர்கள் மீதான சித்திரவதை தொடர்கிறது. இளைஞர்கள் திடீர் திடீரென்று கைதுசெய்யப்படுகிறார்கள். காணாமல் போகிறார்கள். பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறார்கள். தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றம் தொடர்கிறது. தமிழர் பகுதி முழுவதும் இராணுவத்தின் கட்டுப்​பாட்டில் உள்ளது.
போர் நடைபெற்ற பகுதிகளில் புனரமைப்பு செய்ய இந்தியாவும் உலக நாடுகளும் கொடுத்த நிதியில், போரில் பலியான சிங்கள வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் ஊனமுற்ற சிங்கள வீரர்களுக்கு மறுவாழ்வு என்று பல பணிகள் நடக்கின்றன.
ஆனால், ஈழத் தமிழர்களின் வாழ்க்கை நிலை நாளுக்கு நாள் மோச​மாகி வருகிறது. 10 கோடி உலகத் தமிழர்களையும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்​களையும் இலங்கை - இந்தியா - அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டுசேர்ந்து ஏமாற்றி வருகிறது.

கேள்வி: அமெரிக்கத் தீர்மானத்தில் உள்நோக்கம் இருக்கிறது என்கிறீர்களா?

பதில்: கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்திருக்கிறது. கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது, இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்​படவில்லை என்று அமெரிக்காவே கவலை தெரிவித்துள்ளது.
ஆனால், அதே அமெரிக்காதான் மார்ச் 7-ம் திகதி அன்று, இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்த ஐந்து லட்சம் அமெரிக்க டாலர் நிதிஉதவி அளித்துள்ளது. இந்திய அரசும் பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
இந்தியா முன்னின்று நடத்திய ஈழத் தமிழர் இனப் படுகொலையை அமெரிக்காவும் ஐ.நா. சபையும் மௌனமாக வேடிக்கை பார்த்தது. சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்கவே இலங்கைக்கு உதவுவதாக இந்தியா நாடகமாடுகிறது. இந்த சர்வதேச அரசியல் நாடகத்தை தமிழ் தேசிய சக்திகள் புரிந்துகொள்ள வேண்டும்.

கேள்வி: இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்று அமெரிக்கா இப்போது வலியுறுத்தியுள்ளதே?

பதில்: அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய அதிகாரிகள், கடந்த மாதம் வவுனியாவில் முகாமிட்டு இலங்கை இராணுவத்தினருக்குப் போர்ப் பயிற்சிகளை அளித்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் ஆட்டம் ஓய்ந்துவிட்டது. அதாவது, அமெரிக்காவின் ஈராக் பங்களிப்பு முடிந்துவிட்டது. அதனால், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை நோக்கிக் கவனத்தைத் திருப்பியுள்ளது.
அமெரிக்காவுக்கு இந்தியா உற்ற துணையாக இருக்கிறது. இந்த இரு நாடுகளுக்கும் இலங்கையைத் தங்கள் வசம் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. எனவேதான், அமெரிக்கா இப்போது கொண்டுவந்துள்ள தீர்மானத்தை இந்தியா கூறிய திருத்தத்துடன் தாக்கல் ​செய்துள்ளது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினாலும், இலங்கையின் ஒப்புதல் இல்லாமல் எதுவும் செய்துவிட முடியாது.
இலங்கைத் தமிழர்கள் மீது உண்மை​யிலேயே அமெரிக்​காவுக்கு அக்கறை இருந்தால், ஐ.நா. தலைமையில் சர்வதேசப் போர்க் குற்ற விசாரணை, இலங்​கைத் தமிழர்களுக்கு இறுதி அரசியல் தீர்வு காணும் வரை பொருளாதாரத் தடை தனித் தமிழீழம் அமையப் பொது வாக்கெடுப்பு ஆகிய தீர்மானங்களை அமெரிக்கா கொண்டுவந்திருக்க வேண்டும். இதற்கு இந்தியா உறுதுணையாக இருக்க வேண்டும்.

கேள்வி: விடுதலைப் புலிகள்தான் தங்கள் எதிரி, ஈழத் தமிழர்கள் இல்லை என்று காங்கிரஸ் கூறுகிறதே?

பதில்: ஈழத் தமிழர்கள் மீது மட்டுமல்ல... இந்தியாவில் வாழும் தமிழர்கள் மீதே அவர்​களுக்கு அக்கறை இல்லை. இதுவரை 650-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது. அதைக் கேட்க நாதியில்லை.

 பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலைபற்றி, நாடாளு​மன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் கொதித்தெழுந்தன. ஆனால், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மௌனமாகவே இருந்தார்.
இலங்கைத் தமிழர்கள் மீது காங்கிரஸுக்கு உண்மை​யிலேயே அக்கறை இருந்தால், இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைத் தீர்மானத்தை இந்திய அரசே முன்மொழியட்டும்.
2011-ல் தெற்கு சூடான் பிறந்ததுபோல, ஈழத் தமிழர்களுக்கு தனி நாடு அமைத்துக் கொடுக்கட்டும். இவ்வாறு  காங்கிரஸுக்கு சவால்விடுகிறார் வேல்முருகன்.

0 கருத்துகள்:

Post a Comment