ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியான 17 பேரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. மேலும், தீவிரவாதம், மாவோயிஸ்ட் தாக்குதல்களால் கொல்லப்படும் நபர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் சட்ட முன்வடிவிற்கும் அமைச்சரவை அனுமதி அளித்ததோடு மேற்குறிப்பிட்ட தாக்குதல்களினால் நிரந்தர ஊனமுற்றவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்று தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் அருணா தெரிவித்தார்.
ஐதராபாத் சம்பவத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளதையும் அமைச்சர் கூறினார்.
குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் மன்மோகன் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று முறையிட்டனர். இக்கோரிக்கையை ஏற்ற பிரதமர், அரசு வேலை வழங்குவதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் கிரண் குமார் ரெட்டியிடம் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் சட்டம் இயற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்
0 கருத்துகள்:
Post a Comment