முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரிஷியூர் கிராமத்தில் கஸ்தூரி என்பவரது வீடு இடிக்கப்பட்டது.
இது சம்பந்தமான வழக்கு கடந்த ஆண்டு நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, சசிகலா சகோதரர் திவாகரன் உள்பட சிலரை பொலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆனார்கள். அந்த வழக்கு தற்போது நீடாமங்கலம் ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திவாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களான ரிஷியூர் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமேனன், அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் ரிஷியூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சோம.தமிழார்வனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சோம.தமிழார்வன் நீடாமங்கலம் பொலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து மன்னார்குடி பொலீஸ் துணை சூப்பிரண்டு அன்பழகன், மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் பொலீஸார் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் திவாகரனை நேற்று இரவு 7 மணிக்கு அவரது வீட்டில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட திவாகரன் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட்டார். பின்னர் அவரை நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக பொலீஸார் அழைத்துச் சென்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment