இலங்கை தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் நாளை பாரிய உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்துகின்றனர்.
சுதந்திர தமிழ் ஈழத்துக்கான போராட்டம் வரலாறு காணாத அளவில் தமிழகத்தில் நடந்து வருகிறது. மாணவர்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது.
தனித் தமிழ் ஈழம் மலர வேண்டும். உலகெங்கும் பரவிக் கிடக்கும் உறவுகள் சுதந்திர ஈழத்தில் ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், நடிகர்களின் ரசிகர்களும் இந்தப் போராட்டத்தில் கைகோர்த்துள்ளனர். நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தியின் ரசிகர்களும் களமிறங்கியுள்ளனர்.
இவ்விரு நடிகர்களின் சென்னை மாவட்ட ரசிகர்கள் இணைந்து நாளை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையின் எதிரே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.
10 கோரிக்கைகளை முன்வைத்து இவ் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1. தனித் தமிழீழம் அமைய ஈழத் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு
2. சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், ஊடகங்களும் இலங்கையில் நடந்தது திட்டமிட்ட இனப் படுகொலை என்பதற்கு அளித்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இலங்கை அரசு மீது நடவடிக்கை
3. சர்வதேச அமைப்புகள் மூலம் நியாயமான போர்க்குற்ற விசாரணை
4. இனப்படுகொலைக்குக் காரணமான ராஜபக்ச மற்றும் இலங்கை இராணுவக் கட்டமைப்பை தண்டிக்க வகை செய்தல்
5. தமிழர் பகுதியிலிருந்து இராணுவத்தை முற்றிலுமாக வெளியேற்றுதல்
6. தமிழரிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை திருப்பித் தருதல் மற்றும் தமிழர் பகுதிகளில் திட்டமிட்டு நடத்தப்பட்ட சிங்கள குடியேற்றங்களை அப்புறப்படுத்துதல்
7. எந்தவித காரணமும் இல்லாமல் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் தமிழ் இளைஞர்களை விடுவித்தல்
8. யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்துதல்
9. தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள கடற்படை மீது கடும் நடவடிக்கை
10. உலகத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில் முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தனித் தமிழ் ஈழம் உள்ளிட்ட தீர்மானங்களை உடனே நிறைவேற்றுதல்
0 கருத்துகள்:
Post a Comment