பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் (69). ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்த இவர் கடந்த 1999 முதல் 2008-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தார்.
2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியை பிடித்தது. அதை தொடர்ந்து அவர் லண்டன் மற்றும் துபாய்க்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் வருகிற மே 11-ந் திகதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. எனவே, அவர் இன்று மீண்டும் பாகிஸ்தான் திரும்ப திட்டமிட்டார். அவருக்கு தலிபான் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்தனர். அவர் பாகிஸ்தான் திரும்பினால் தற்கொலை படையினரால் கொல்லப்படுவார் என எச்சரித்தனர்.
அதை பொருட்படுத்தாத முஷரப் தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு அஞ்சாமல் துபாயில் இருந்து பாகிஸ்தான் புறப்பட்டார். துபாயில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட அவர் தனது 94 வயது தாயாரை முத்தமிட்டு ஆசிபெற்றார்.
பின்னர் துபாய் விமான நிலையம் வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் ”நான் எனது நாட்டுக்கு திரும்பி செல்வதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என தெரிவித்தார். விமானம் மூலம் இன்று கராச்சி வந்த முஷரப்பை அவரது ஆதரவாளர்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர்.
ஆதரவாளர்களுக்கு மத்தியில் பேசிய முஷரப் கூறியதாவது:-
நான் இன்று மீண்டும் என் தாய் நாட்டிற்கு வந்திருக்கிறேன். நான்காண்டுகளுக்கு பிறகு மீண்டும் என் சொந்த மண்ணிற்கு வந்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். நான் வரவே மாட்டேன் என்று கூறியவர்கள் இப்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.
அல்லாவை தவிர நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். என் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறப்பட்ட போதிலும் உயிருக்கு அஞ்சாமல் பாகிஸ்தானை காப்பாற்ற நான் மீண்டும் வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
0 கருத்துகள்:
Post a Comment