இலங்கையில் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் மாணவர்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த 8-ந் திகதி லயோலா கல்லூரி மாணவர்கள் 18 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியதும் மற்ற கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் தீயாக இது பரவியது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உண்ணாவிரதம், சாலை மறியல் என போராட்டங்கள் வெடித்தன.
இதன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் கலைக் கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன. இதன் பிறகும் மாணவர் போராட்டம் முடிவுக்கு வராமலேயே உள்ளது. நேற்று நள்ளிரவு 2 மணியளவில் மெரீனா காந்தி சிலை அருகில் அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் 20 பேர் திரண்டு திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பொலீஸார் அங்கு விரைந்து சென்று உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் இதற்கு மாணவர்கள் மறுப்பு தெரிவித்ததையடுத்து மாணவர்கள் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ய பொலீஸார் முயற்சி செய்த போதும் இதற்கு மாணவர்கள் ஒத்துழைக்கவில்லை.
இதையடுத்து அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலீஸார் குண்டு கட்டாக மாணவர்களை தூக்கிச்சென்று பொலீஸ் வேனில் ஏற்றினர். அப்போது மாணவர்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். பொலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் நள்ளிரவில் மெரீனாவில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் 20 மாணவர்களும் கைது செய்யப்பட்டு மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரராவ் சமூகநல கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தின்போது களைப்புடன் காணப்பட்ட மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மடியில் போட்டுக்கொண்டு மற்ற மாணவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்தனர். ஆனால் அவருக்கு மயக்கம் தெளியவில்லை.
இதைத் தொடர்ந்து அந்த மாணவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதற்கிடையே ராஜா அண்ணாமலைபுரத்தில் சட்டப்பல்லைக்கழக மாணவர்களின் போராட்டம் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது. கடந்த 11-ந்தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் இந்த மாணவர்களில் பீமராவ், கெல்வின் புவனேஸ்வரன் ஆகியோர் 3-வது நாளிலும், மோனிஷா, நரேந்திரன், சதீஷ்ராஜா ஆகியோர் 5-வது நாளிலும் மயக்கம் அடைந்து ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று சவுந்தராஜன், ரஞ்சித் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் தவிர 11 மாணவர்கள் இன்றும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
0 கருத்துகள்:
Post a Comment