Search This Blog n

17 March 2013

இலங்கை விடயம் தொடர்பாக மத்திய அரசுக்கு ?


தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நேற்றைய தினம் நீங்கள் மத்திய அரசு பற்றி ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறீர்கள்; அதற்கு மத்திய அரசிடமிருந்து ஏதாவது பதில் வந்துள்ளதா?.
பதில்:- இதுவரையில் வரவில்லை. வந்தால் உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.
கேள்வி:- மத்திய அரசிடம் பல நாட்களாக இந்த பிரச்சினை பற்றி சொல்லி வருகிறீர்கள். ஆனால் மத்திய அரசு இதுவரை அதன் நிலையை வெளிப்படையாக சொல்லவில்லையே?. அது எந்த அளவிற்கு உங்களுக்கு வருத்தத்தை அளிக்கின்றது?.
பதில்:- அதனால் தான் நாங்களும் எதையும் வெளிப்படையாக சொல்லாமல் இருக்கிறோம்.
கேள்வி:- மத்திய அரசின் நிலைப்பாடு உங்களுக்கு எந்த அளவிற்கு வருத்தத்தை தருகிறது?.
பதில்:- மத்திய அரசு வழக்கம் போல செயல்படுகிறது.
கேள்வி:- உங்களுடைய இறுதியான எதிர்பார்ப்பு என்ன?.
பதில்:- அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில், தேவையான திருத்தங்களைச் செய்வதற்கு மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
கேள்வி:- மத்திய அரசிடமிருந்து பதில் வருவதற்கு ஏதாவது காலக்கெடு வைத்திருக்கிறீர்களா?.
பதில்:- காலக்கெடு என்பது இது பற்றி மத்திய அரசு தருகின்ற பதில் தான். அதற்கிடையே உள்ளது தான் காலக்கெடு. அழுத்தம் கொடுத்து விட்டோம்
கேள்வி:- டெல்லியில் நடைபெற்ற டெசோ கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிப்போம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அதே சமயத்தில் இந்திய அரசிடம் இருந்து எந்த விதமான பதிலும் வராமல் இருப்பதால், எத்தகைய அழுத்தத்தை கொடுக்கவிருக்கிறீர்கள்?.
பதில்:- அதனால்தான் அறிக்கை கொடுத்திருக்கிறோம். தேவையான அழுத்தம் கொடுத்து விட்டோம்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. மத்திய அரசில் அங்கம் வகிப்பது பற்றி தமிழ்நாட்டிலே உள்ள ஆதிக்க எண்ணம் கொண்ட ஒரு சில கட்சிக்காரர்களையும், ஒரு சில ஊடகங்களையும் கடுமையான வயிற்றெரிச்சல் வாட்டிக்கொண்டிருக்கிறது. அவர்களது தவிப்பெல்லாம், தி.மு.க.வை தனிமைப்படுத்திட வேண்டும் என்பதுதான்.
இலங்கை பிரச்சினையில் கூட தி.மு.க. ஒரு மாநில அரசியல் கட்சி என்பதையே மறந்துவிட்டு, ஏதோ தி.மு.க. மிகப்பெரிய வல்லரசு என்பதை போல கற்பித்துக்கொண்டு, இலங்கையிலே நடைபெற்ற படுகொலைகளையெல்லாம் தி.மு.க. நினைத்திருந்தால் நிறுத்தியிருக்கலாம் என்பதைப் போல இன்றைக்கும் திட்டமிட்டு, வேண்டுமென்றே குறை கூறுவோர் உண்டு.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளைக் கண்டித்து, நம்பகத் தன்மை கொண்ட, சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றினை நடத்தவேண்டும் என்பதற்காக இந்திய அரசே வலுவானதொரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னெடுத்துச்செல்ல வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி; அவ்வாறு இந்திய அரசு தீர்மானத்தை முன்மொழிவதற்கு வெளிப்படையான எந்த முயற்சியையும் மேற்கொள்ளாத காரணத்தால், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தையாவது உரிய திருத்தங்களோடு ஆதரிக்க முன் வரவேண்டுமென்று பல நாட்களாக வலியுறுத்தி, அதற்கு மத்திய அரசிடமிருந்து தமிழினத்திற்கு நிறைவு தரும் எந்த விதமான பதிலும் வராத நிலையில்; 15-3-2013 அன்று தி.மு.க.வின் கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில், தி.மு.க. இந்திய அரசின் அமைச்சரவையிலே இனி மேலும் நீடிப்பதென்பது அர்த்தமற்றதாகி விடும் என்று அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தேன்.
கூட்டணியில் அங்கம் வகிப்பதால், எந்தவொரு முக்கியமான பிரச்சினையிலும், முதலில் கோரிக்கை வைக்கிறோம்; அடுத்து வலியுறுத்துகிறோம்; பிறகு அழுத்தம் தருகிறோம்; தொடர்ந்து இப்படி செய்ததற்கு பின்னரும், நம்பிக்கை ஒளி தோன்றவில்லையென்றால், இறுதிகட்ட உத்தியாக இத்தகைய முடிவை எடுத்து அறிவிக்கிறோம்.
இதிலே கிண்டலுக்கோ, கேலிக்கோ இடமில்லை. இப்படி முடிவெடுப்பது என்பது கூட்டணி அரசியலில் நடைபெறும் நிகழ்வுதான். தமிழ்நாட்டின் நலன்களுக்காக, தமிழர்களின் உணர்வுகளுக்கும், எண்ணங்களுக்கும் உகந்த வகையிலேயே தி.மு.க. இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து அறிவிக்கின்றது.
ஆனால் மத்திய அரசிலே தி.மு.க. நீடிப்பதே உறுத்துகிறதே என்ற எண்ணத்தோடு அவலை நினைத்து உரலை இடிப்பதை போல செயல்படுவோருக்கு, தி.மு.க. எடுக்கும் முடிவுகள் விந்தையாக இருந்தாலும், தமிழக மக்கள் சரியாகவே புரிந்து கொண்டுள்ளார்கள்.
 

0 கருத்துகள்:

Post a Comment