டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு அமெரிக்கா வீரமங்கை விருது வழங்க உள்ளது.
சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ம் திகதி இந்த விருதை, அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி ஆகியோர் வழங்க உள்ளனர்.
உயிரிழந்த மாணவி, தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள தைரியமாக போராடியதாகவும், காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் குற்றவாளிகள் ஆறு பேருக்கும் உரிய தண்டனை வழங்க வலியுறுத்தியதையும் அமெரிக்கா பாராட்டியுள்ளது.
மேலும், நீதி கேட்டும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராகவும், மாணவியின் குடும்பத்தினர் நடத்தி வரும் தொடர் போராட்டத்தையும் அமெரிக்க அரசு வெகுவாகப் புகழ்ந்துள்ளது.
மாணவியின் உயிரிழப்பு, இந்தியா மட்டும் அல்லாமல் பல்வேறு நாடுகளில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் விருது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து பெண்களின் முன்னேற்றத்திற்காக தைரியமாக போராடிய பெண்களுக்கு அமெரிக்க அரசு வீரமங்கை விருதினை வழங்கி வருகிறது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருது இதுவரை 45 நாடுகளைச் சேர்ந்த 67 பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 10 பெண்கள் இந்த விருதினை பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment