கன்னியாகுமரியில் கடல் உள் வாங்கியதால் இன்று காலை திடீரென கடலில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் பகுதியில் கடல் நீர் உள் வாங்கியது. இதனால் கடலுக்குள் இருந்த பாறைகள், பாசிகள் வெளியே தெரிந்தன. அதிகாலையில் கடலில் நீராடச் சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பதறியடித்து கரை திரும்பினர். கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.
கடல் உள்வாங்கியதால் படகுத்துறையில் நீர்மட்டம் தாழ்ந்தது. இதன் காரணமாக விவேகானந்தர் பாறைக்கு காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் அதிகாலையிலேயே படகில் செல்ல டிக்கெட் வாங்க காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பகல் 10 மணியளவில் கடலின் நீர்மட்டம் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் படகு இயக்கப்படவில்லை.
0 கருத்துகள்:
Post a Comment