Search This Blog n

09 June 2014

ஆப்கானிஸ்தானில் இருந்து மின்னஞ்சல்பாதிரியார் திரும்பிவிடுவார்: !

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட பாதிரியார் பத்திரமாக இருப்பதாகவும், அவரை மீட்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடப்பதால் விரைவில் மீட்கப்படுவார் என்று மின்னஞ்சல் வந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டை வாரியன்வயலைச் சேர்ந்தவர் அலெக்சிஸ் பிரேம் குமார்.
சமூக சேவையில் ஆர்வம் கொண்ட இவர், ஆப்கானிஸ்தான் ஹராத் மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய குழந்தைகள் கல்விக்காக பாடுபட்டு வந்தார்.
கடந்த 2ம் திகதி அலெக்சிஸ் பிரேம்குமாரை, தலிபான் தீவிரவாத குழு கடத்திச் சென்றது.
பாதிரியாரைக் கடத்த உதவிய 3 தலிபான் தீவிரவாதிகள் மட்டும் கைது செய்யப்பட்டதாக இதுவரை தகவல் வந்துள்ளது.
அவரைக் கடத்தி ஏழு நாள்களாகியும், இதுவரை அவரை பற்றிய உறுதியான தகவல் கிடைக்காமல் அவரது பெற்றோர், உறவினர்கள் கண்ணீருடன் நாள்களைக் கழித்து வருகின்றனர்.
இந்நிலையில் அலெக்சிஸ் பிரேம்குமார் பணிபுரியும் ஜே.ஆர்.சி., நிறுவன கிறிஸ்தவ பாதிரியார் குழு, டெல்லியில் முகாமிட்டு இந்திய வெளியுறவுத் துறை மூலம் ஆப்கானிஸ்தான் நாட்டின் வெளியுறவுத் துறை அதிகாரிகளை தினமும் தொடர்பு கொண்டு பாதிரியாரை மீட்க போராடி வருகிறது.
அலெக்சிஸ் பிரேம்குமார், சொந்த மாவட்டம் சிவகங்கை என்றாலும், அவர் பத்தாம் வகுப்பு படிக்கும்வரை மட்டுமே அங்கு பெற்றோருடன் இருந்துள்ளார்.
அதன்பின் உயர்படிப்புகளை மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் படித்துவிட்டு, கொடைக்கானல், திண்டுக்கல் உள்ளிட்ட பிற இடங்களில் தங்கி சமூக சேவை புரிந்துள்ளார்.
அதனால், அவருக்கும், சிவகங்கை மாவட்டத்துக்கும் பெரிய தொடர்பு இல்லாமல் இருந்துள்ளது.
பெற்றோர், சகோதர, சகோதரிகளை மட்டும் பார்ப்பதற்கு, அவர் சிவங்கை மாவட்டம் வந்து சென்றுள்ளார்.
இதுகுறித்து பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரின் சகோதரர் ஆல்பர்ட் மனோகரனிடம் கேட்ட போது, இன்னமும் பத்திரமாக இருப்பதாகத்தான் சொல்கின்றனர். ஆனால், எப்படி, எங்கே இருக்கிறார் என்பது மட்டும் தெரியவில்லை.
பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மூலம் தெரியப்படுத்தி உள்ளோம்.
முதல்வருடன், முக்கிய தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அலெக்சிஸ் பிரேம்குமார் பணிபுரிந்த ஜே.ஆர்.சி. நிர்வாகிகள் தெரிவிக்கையில், பொறுமையாக இருங்கள், அவர் 2 நாளில் திரும்பி வந்துவிடுவார் என ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லியில் உள்ள ஜே.ஆர்.சி. பாதிரியார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
 

0 கருத்துகள்:

Post a Comment