இந்தியாவிற்கு யுத்தம் காராணமாக அகதிகளாகத் தஞ்சம் புகுந்தவர்களில் 65 பேர் நாளை நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த 65 இலங்கையர்களும் நாளை காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர். இவர்களை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் வரவேற்கவுள்ளார்.
இது தொடர்பில் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதாவது, 30 வருடகாலமாக நாட்டில் இடம்பெற்று வந்த யுத்தம் காரணமாக தமது சொந்த இடங்களை விட்டு இலட்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர். இவர்களில் அண்டைய உறவு நாடான இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வசித்துவருகின்றனர்.
தற்போது நாட்டில் அமைதியான சூழல்
உருவாகியுள்ள நிலையில் இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்தவர்களில் பலர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி குடியேறுவதற்கு விருப்பம் கொண்டுள்ளனர். இருந்த போதிலும் முன்னைய ஆட்சிக்காலத்தில் அதற்கான சாதகமான நிலைமை காணப்படவில்லை. இந்நிலையில் புதிய அரசாங்கம் ஆட்சிப்பீடம் வந்த பின்னர் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய இந்தியாவில் அகதிகளாக வசித்துவந்த 65 இலங்கையர்கள் நாளை நாடுதிரும்பி தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறவுள்ளனர். மேற்படி நாடுதிரும்பவுள்ள 65 பேரும் நாளை காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர். இவர்களை மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்
வரவேற்கவுள்ளார்.
.
0 கருத்துகள்:
Post a Comment