புவி வெப்பமடைதல் காரணமாக, வரும் 2100ம் ஆண்டுக்குள், எவரெஸ்ட் பனிச்சிகரம் முற்றிலும் உருவி விடும் என்று, ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். புவி வெப்பமடைதல் என்பது, சர்வதேச நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக தற்போது உருவெடுத்துள்ளது. காடுகள்
அழிப்பு, தொழிற்சாலை பயன்பாடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் புவி வெப்பமடைதல் ஏற்படுகிறது. இந்த நிலையில், புவி வெப்பமடைவதால், உலகின் உயர்ந்த பனிச்சிகரமான எவரெஸ்ட்டில் (8,848 மீட்டர் உயரம்) ஏற்படும் மாற்றங்கள் குறித்து, நேபாளம், பிரான்ஸ்,
நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டனர்.
அதன் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பதாவது: புவி வெப்பமடைதல் காரணமாக, எவரெஸ்ட் சிகரத்தின் வடிவில் மாற்றம் ஏற்படும் என்பது, தெளிவாக தெரிகிறது. இதனால், தனது பெரும்பகுதியை எவரெஸ்ட் இழக்க
நேரிடும். இதன்படி, 2100ம் ஆண்டுக்குள் 70 சதவீதத்தில் இருந்து 99 சதவீதம் வரைக்கும் எவரெஸ்ட் சிகரம் உருகிவிடுவதற்கு
வாய்ப்புள்ளது. புவி வெப்பமடைவது அதிகரித்து வருவதால், பனிக்கட்டிகள் மிக வேகமாக உருகும். மேலும், பனிப்பிரதேசங்களில், பனி மழை பெய்யாமல், சாதாரண மழை பெய்வதற்கு இது வழி வகுக்கும்.
அத்துடன், பனிச்சிகரங்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, அவை உருகி ஓடும் பகுதிகள் அதிகமாகும். நேபாளம் - இமாலய பகுதியில் உள்ள துத் கோசி பிராந்தியமும், பாதிப்படையும் அபாயம்
உள்ளது. அங்கு, பனிச்சிகரங்கள் உருகுவதால் ஏற்படும் நீர்ப்பெருக்கு, கோசி ஆற்றை சென்றடையும். இதனால், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி, பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
Post a Comment