தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்டால் 80 சதவீத கட்டிடங்கள் பலத்த சேதம் அடையும் என்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பேரழிவு நிர்வாக மையம் சார்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்க பாதிப்பு தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆள் இல்லா குட்டி விமானங்கள் மூலம் படம் பிடிக்கப்பட்டு சென்னையில் உள்ள கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 3 மாடிக்கு மேல் கொண்ட 22,758 கட்டிடங்களின் உறுதித்தன்மை சோதிக்கப்பட்டது.
அப்போது அந்த கட்டிடங்களில் சுமார் 30 சதவீத கட்டிடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் அமைப்புடன் கட்டப்படவில்லை என்பது தெரியவந்தது.
மேலும் சென்னையில் 6.5 ரிக்டர் அளவுக்கு மேல் பூகம்பம் ஏற்படும் பட்சத்தில் 80 சதவீத கட்டிடங்கள் சேதம் அடையும் என்ற அதிர்ச்சி தகவலும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பேரழிவு நிர்வாக மையத்தினர் தங்களது ஆய்வு தகவல்களை தொகுத்து ஒரு அறிக்கையாக தயாரித்து கடந்த 2011ம் ஆண்டு தமிழக அரசிடம் சமர்ப்பித்தனர்.
அதில் சென்னையில் இனி கட்டப்படும் கட்டிடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்த ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தியாவில் நிலநடுக்க பாதிப்பு பகுதிகளை 5 மண்டலங்களாக பிரித்துள்ள நிபுணர்கள், தமிழ் நாட்டில் 80 சதவீத பகுதிகள் நிலநடுக்க அச்சுறுத்தல் இல்லாத முதல் மண்டலத்துக்குட்பட்டதால் பெரிய பாதிப்பு இருக்காது என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், சேலம், கோவை, நீலகிரி ஆகிய பகுதிகள் அதிக பாதிப்பு ஏற்படும் நிலநடுக்க மூன்றாவது மண்டலத்தில் உள்ளன.
எனவே நிலநடுக்கம் வந்தால் இந்த நகரங்களில் அதிக பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக சென்னையில் அதிக பாதிப்பு ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
0 கருத்துகள்:
Post a Comment