தமிழகத்துக்கு நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவுதான் எனத் தெரிய வந்துள்ளது. நிலஅதிர்வு, பூகம்பம், நிலநடுக்கம் என இயற்கைப் பேரிடர்கள் பல பெயர்களில் இருந்தாலும் "பூகம்பம்' என்று சொல்லும் போதே மக்கள் அதிர்ச்சியடைவது வாடிக்கையாகி விட்டது.
அண்டை நாடுகளிலும், இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டால், இந்தியாவில் குறிப்பாக தென் மாநிலங்களில் நிலநடுக்க பாதிப்புகள் நேரலாம் என்ற பீதி அண்மைக்கால சம்பவங்கள் மூலம் பரவி வருகிறது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் நாயக்கன்கொட்டாய், குப்பூர், ஜமுனாபட்டி, சிந்தல்பாடி, மொரப்பூர், கம்பைநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலநடுக்க பீதி ஏற்பட்டது. இதனால், அக்கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியேறி இரவு முழுவதும் வீதியில் தங்கிய நிகழ்வு "வேதனை அளிக்கும் வினோதம்' என்று புவியலாளர்கள் கருதுகின்றனர். மேலும், பேரிடர் பாதிப்புகளைப் பயன்படுத்தி சில விஷமிகள் தவறான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் புகார்கள் எழுகின்றன. இந்நிலையில், நிலநடுக்கம் பற்றியும், அதன் தன்மை, விளைவுகள் பற்றியும் பொதுமக்கள் உணர்ந்து கொள்வது அவசியமாகிறது.
நிலநடுக்கம் என்றால் என்ன? பூமியின் மேல் பரப்பு நகரும் பிளேட்டுகளாக உள்ளன. நிலம், நீர் பரப்புகளில் அமைந்துள்ள இந்த பிளேட்டுகளில் ஏழில் ஐந்து பிளேட்டுகளில்தான் ஐந்து கண்டங்களும், பசிஃபிக் பெருங்கடல் பகுதிகளும் உள்ளன. இந்த பிளேட்டுகளுக்கு அடியில் உள்ள பாறைகள், கொதிக்கும் குழம்பு
கள் உள்ளன. பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக்குழம்பு நகருகின்றன. இதனால்தான் மேல் பரப்பில் உள்ள பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து நகருகின்றன. இந்த நகர்வின் வேகம், வருடத்திற்கு ஒரு செ.மீ. முதல் 13 செ.மீ. வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. பூமியின் சுழற்சியுடன் ஒப்பிடுகையில், இந்த அளவு மிகச் சிறியது என்ற போதிலும், இந்த பிளேட்டுகளின் லேசான உராய்வுகூட சில வேளைகளில் பெரும் நிலநடுக்கத்தை உருவாக்கும். ஒரு நிலநடுக்கம், நிலச்சரிவையும் சில நேரத்தில் எரிமலையின் செயல்பாட்டையும் அதிகரிக்கச் செய்யும்.
நேபாள நிலநடுக்கம் ஏன்?: நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட, வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நேபாளத்தின் பூமிப் பகுதிக்கு அடியில் உள்ள பாறைகளே காரணம். இதன் விளைவாக இமயமலையைச் சார்ந்துள்ள பகுதிகளான அஸ்ஸாம், காத்மாண்டு தொடங்கி பாகிஸ்தானின் வட பகுதி வரை நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதன் பாதிப்புதான் அவ்வப்போது தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உணரப்படுகிறது. நிலநடுக்கத்தை முன்கூட்டியே துல்லியமாகக் கணிக்க இன்னும் விஞ்ஞானிகளால் முடியவில்லை. ஆனால், நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களை ஐந்தறிவுள்ள விலங்குகள், பறவைகள் முன்கூட்டியே அறியும் திறனை இயற்கையாகவே பெற்றுள்ளன. பல மணி நேரத்துக்கு முன்பே பறவைகளின் சப்தம், சிறு சிறு விலங்குகள் ஓலமிடும் குரல்கள் மூலம் இதை உணர முடியும்.
இந்தியாவின் மண்டலங்கள்: இந்தியாவின் மாநிலங்களை பல மண்டலங்களாகப் புவியிலாளர்கள் பிரித்துள்ளனர். இமயமலை அடிவாரத்தில் உள்ள மாநிலங்களான இமாசல பிரதேசம், அஸ்ஸாம் உள்பட வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவை ஐந்தாவது மண்டலத்தில் இடம் பெற்றுள்ளன. அதாவது நிலநடுக்கத்தின் அளவுகோல் தலைகீழாக அளவிடப்படுகிறது. முதல் மண்டலம் என்பது நிலநடுக்க வாய்ப்பு குறைவானது. ஐந்தாவது மண்டலம் என்பது ஆபத்து அதிகமானது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர், பாரமுல்லா உள்ளிட்ட பல பகுதிகள் ஐந்தாவது மண்டலத்திலும், லடாக் சார்ந்த பகுதிகள் நான்காவது மண்டலத்திலும் உள்ளன. தில்லி, மும்பை நான்காவது மண்டலத்தில் உள்ளது. இதில் இரண்டாவது மண்டலத்திலிருந்த தமிழகமோ 2004-இல் ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு மூன்றாவது மண்டலத்துக்கு மாறியுள்ளதாகத் தெரிய வருகிறது.
தமிழகத்துக்கு பாதிப்பு வராது ஏன்?
நிலநடுக்க வாய்ப்பு தமிழகத்தில் குறைவு என்கிறார் மூத்த புவியியல் வல்லுநரும், தில்லி ஜவாஹர் லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான டாக்டர் கே.எஸ்.ஆர். சாய்பாபா. இதுகுறித்து அவர் கூறியது:
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பூகோள அறிவியலின்படி, நிலப் பகுதியைச் சூழ்ந்து நீரோட்டம் அதிகமாக உள்ளது. இதனால், நிலப் பகுதிக்கு ஆபத்து ஏற்படாது.
2004, டிசம்பர் 24-ஆம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி அலைகளைத் தோற்றுவித்தது.
இதன் எதிரொலியாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமி ஆழிப்பேரலையின் தாக்கம் அதிகரித்து, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கடலூர், சென்னை ஆகியவற்றில் ஏற்படுத்திய சேதத்தையும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகளையும் இன்னும் நாம் மறந்து விட முடியாது. ஆனால், நேபாளத்தில் நிலைமை வேறு.
சென்னை, ராமேசுவரத்தில்: நேபாளத்தின் மலைப் பிரதேசங்களில் பூமிக்கு அடியில் உள்ள எரிமலைக் குழம்பால் நிலத்தடி நீர் ஆவியாகிறது. இதனால், அதிவேகமாக அங்குள்ள பூமிப் பகுதி வறண்டு அதன் அடியில் உள்ள பாறைகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தப் பாதிப்புகள் சென்னை, ஹைதராபாத், திருவனந்தபுரம், மும்பை ஆகிய நகரங்களில் கண்டிப்பாக இல்லை. எனவே, இந்த நகரங்களில் நிலநடுக்க வாய்ப்புகள் குறைவு.
சுனாமியின் தாக்கம் இருந்தாலும் கூட, கடலோர நகரங்களான ராமேசுவரம், விசாகப்பட்டினம், இலங்கையின் கடலோரப் பகுதிகளில் நிலநடுக்க வாய்ப்பு கிடையாது. இங்கு 2 முதல் 7 சதவீதம் வரைதான் நிலநடுக்கத்துக்கான வாய்ப்புகள் உள்ளன' என்றார் அவர்.
சேதம் விளைவித்த பெரிய நிலநடுக்கம்
(ரிக்டர் அளவில்)
குஜராத், கட்ச் (2001, ஜனவரி 26) 7.1
இந்தோனேசியா, சுமத்ரா தீவு
(2004, டிசம்பர் 24) 9.2
பாகிஸ்தானின்
மேற்கு மாகாணம் (2005) 7.6
இந்தோனேசியாவின்
யோக்யகர்த்தா (2006) 6.3
சீனாவின் சிச்சுவான் (2008) 8
ஹைதி (2010) 7
ஜப்பானின் வடகிழக்குப் பகுதி (2011) 9
இரானின் தப்ரீஸ் (2012) 6.4
நேபாளம்: (2015, ஏப்ரல் 25) 7.9
பப்புவா நியூ கினியா தீவு
(ஏப்ரல் 30, மே 1) 7.4
0 கருத்துகள்:
Post a Comment