சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கைக் குழந்தையுடன் இருந்த பெண் பொறியாளர் ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பெரும்பாக்கம் அந்தோணியார் நகர் 2-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மென்பொறியாளர் ராஜீவ் இவரது மனைவி ஆர்த்தியும் மென்பொறியாளர்.
இந்த தம்பதிகளுக்கு 10 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. உறவினரான ஆர்த்தியும், ராஜீவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்து வந்த ஆர்த்தி சில மாதங்களாக குழந்தையை கவனிப்பதற்காக வேலையில் இருந்து நின்று விட்டார்.
இந்நிலையில், ஆர்த்தியும், குழந்தையும் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர்.
வேலை முடிந்து இரவு 11 மணி அளவில் ராஜீவ் வீடு திரும்பிய போது, ஆர்த்தி கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
அங்கு நடந்த சோதனையில், கொலையுண்ட ஆர்த்தி அணிந்திருந்த தாலி மாயமாகி இருந்ததை கண்டறிந்தனர்.
எனவே நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் கருதியுள்ளனர்.
இது தொடர்பான தடயங்களை சேகரிக்க தொடங்கியதோடு, ஆர்த்தியின் உடலில் வேறு எங்காவது காயங்கள் இருக்கிறதா என்று ஆய்வு செய்தபோது, அவரது உள்ளாடைக்குள் ஒரு சிறிய கவர் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
அதற்குள், தாலியும், 2 பக்கங்களில் எழுதப்பட்ட கடிதமும் இருந்தது. அதில், ‘‘ஓம் நமசிவாய....தாலி எனக்கு வேண்டும்.... அன்புக்காக ஏங்குகிறேன். என்னை யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. நான் நன்றாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன்'' என்பது போன்ற வார்த்தைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
திருமணமானதில் தொடங்கி கணவன்-மனைவிக்குள் நிலவி வந்த பிரச்சினைகள் பற்றியும் அதில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்டதாக கருதப்பட்ட செயினில் மாட்டப்பட்டிருந்த தாலி டாலர் கிடைத்ததால் நகைக்காக ஆர்த்தி கொலை செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. ஆனாலும், தாலிச் செயின் வீட்டில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
அதனை கொலையாளி திருடிச் சென்றிருக்கலாம் என்று பொலிசார் கருதினாலும், அவரது ஆடைக்குள் தாலியும் கடிதமும் மறைத்து வைக்கப்பட்டிருப்பது இந்த வழக்கில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இக்கொலை சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment