Search This Blog n

17 September 2014

விஜய்க்கு 3 நிபந்தனைகள் - புகழேந்தி தங்கராஜ்

 விஜயின் ‘கத்தி’ திரைப்படத்தைத் தயாரித்துள்ள லைகா மொபைல் நிறுவனத்துக்கும், இனப்படுகொலை செய்த ராஜபக்சே குடும்பத்துக்கும் இடையிலான உறவும் தொடர்பும், அளவுக்கதிகமாக அம்பலமாகி விட்டது. இப்படியெல்லாம் அம்பலமாவோம் என்பதை அறியாமல் – ‘தமிழரின் ரத்தத்தில் நனைந்த பணத்தில் படமெடுக்கிற இழிபிறவிகளா நாங்கள்’ என்றெல்லாம் சவுண்ட் கொடுத்தவர்கள், இப்போது சைலண்ட் மோடுக்குப் போயிருக்கிறார்கள்.
கத்தி தயாரிப்புப் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டன. “படமே முடிந்துவிட்ட நிலையில் அதை எப்படித் தடுக்க முடியும்” என்பது நண்பர்கள் சிலரது கருத்து. இனப்படுகொலையே முடிந்துவிட்ட பிறகு விசாரணை எப்படி நடத்த முடியும் – என்கிற மேலான கருத்துக்கும் இந்த மேதாவிகளின் கருத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
‘படத்தின் உருவாக்கத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தொழில் நுட்பக் கலைஞர்களின் உழைப்பு வீணாகலாமா’ என்பது நண்பர்கள் சிலரின் வாதம். இந்த வாதத்தில் இருக்கிற குறைந்தபட்ச நியாயத்தை நாம் மறுத்துவிட முடியாது. அதே சமயம், படத் தயாரிப்பின் பின்னணியில் ராஜபக்சேவின் கூட்டாளிகள் இருப்பதை அரசாங்க ரகசியம் மாதிரி அடைகாத்த கத்தி தயாரிப்பாளர்களை மன்னித்துவிடவும் முடியாது.
லைக்கா மொபைல் நிறுவனத்தின் பெயரை நீக்கிவிட்டு, வேறு நிறுவனத்தின் பெயருடன் வந்தால் படத்தை வெளியிட அனுமதிக்கலாமே – என்கிற அபத்தமான வாதமும் ஒருகட்டத்தில் முன்வைக்கப்பட்டது. நம்முடைய எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் ஒநாய் படத்துக்கு மேலே ஒட்டகம் என்று எழுதிவிட்டாலே நமக்கு வெற்றிதானே – என்று கூசாமல் கேட்பவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இப்படிப் பேசுபவர்கள், படத்தின் பெயரையே ‘சுத்தி’ என்று மாற்றிவிட்டு, “இது கத்தியில்லை, சுத்தி” என்று அறிவித்துத் தொலைக்க வேண்டியது தானே! இவ்வளவு குழப்பம் எதற்கு?
நான் – கத்தி வெளியாக அனுமதிக்கவே கூடாது – என்கிற கட்சியில்லை. விஜய், முருகதாஸ் என்கிற இரண்டு பச்சைத் தமிழர்கள் சம்பந்தப்பட்ட ஒரு படத்தைத் தடுக்கக்கூடாது என்றே நானும் நினைக்கிறேன். அதே சமயம், இந்தக் கத்தி சிங்களச் சிங்கத்தின் கையில் இருக்கிற அதே கத்தி என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறேன். அதனால்தான், கத்தி குழுவுக்கு நியாயமான சில நிபந்தனைகளை விதிக்கலாம் என்று சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளிப்படையாகப் பேசினேன்.
கத்தி படத்தை வெளியிடுவதற்கு முன், உலகெங்கும் இருக்கிற 10 கோடி தமிழ் மக்களிடம் விஜயும் முருகதாஸும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது என் வாதம். ‘ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை விரட்டி விரட்டிக் கொன்ற ராஜபக்சேவின் கூட்டாளிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு இந்தப்படத்தில் பணியாற்றியதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறோம். இனப்படுகொலை செய்தவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ தயாரிக்கும் எந்தத் திரைப்படத்திலும் இனிமேல் பங்குபெற மாட்டோம்’ என்று விஜயும் முருகதாஸும் கூட்டாக அறிவிக்கட்டும்…… அதற்குப் பிறகு படத்தைத் திரையிடட்டும்! இப்படிக் கேட்பதில் என்ன தவறிருக்கிறது?
தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பிரபல கலைஞர்களைக் கொண்டே தமிழகத்தின் முகத்தில் கரி பூச முயலும் கொழும்பின் கொழுப்பை அடக்கவேண்டும் என்பதுதான் நோக்கமே தவிர, படத்தை எப்படியாவது முடக்கவேண்டும் – என்பது என் நோக்கமில்லை.
தமிழக சட்டப் பேரவையில் 2011ல் முதல்வர் ஜெயலலிதா ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானம், இனப்படுகொலை செய்த இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது. அந்தத் தீர்மானத்தை எப்படியாவது முறியடிக்கவேண்டும் என்பதற்காக வலைவிரித்துக் காத்துக் கொண்டிருந்தது இலங்கை. ‘வேடன் வருவான், வலையை விரிப்பான், விதைகளைத் தூவுவான்’ என்பது தெரியாமல், அந்த வலையில் போய்ச் சிக்கிக் கொண்டது விஜய் குருவி.
யாரோ ஒரு முகம் தெரியாத ஆளைக் கொண்டுவந்து களத்தில் இறக்காமல், ராஜபக்சேவுடன் நகமும் நெய்ல் பாலிஷுமாக ஒட்டிக் கொண்டிருக்கிற லைக்கா மொபைலைக் களத்தில் இறக்கியிருப்பது, தமிழக முதல்வருக்கு ராஜபக்சே விடுத்திருக்கும் நேரடி சவால். “பொருளாதாரத் தடையா விதிக்கச் சொல்கிறீர்கள்….. என்னுடைய சினேகிதர்களைக் கொண்டே தமிழ்நாட்டில் படமெடுக்கிறேன் பார்” என்பதைச் சொல்வதற்காகவே எடுத்திருக்கிறார்கள் கத்தி படத்தை!
ராஜபக்சே குடும்பத்தின் துணை இல்லாமல் எந்தக் களத்திலும் இறங்காத லைக்கா மொபைல், இந்தக் களத்திலும் அவர்களது ஆசியுடன்தான் இறங்கியிருக்கும். லாபம் பார்ப்பது மட்டுமே அவர்களது நோக்கமாயிருக்க முடியாது…….. ஏழரை கோடி தமிழர்களின் முகத்தில் கரி பூசுவதுதான் பிரதான நோக்கமாக இருக்கும். இப்படியொரு நிலையில், எந்தக் கத்தியால் நம் கழுத்தை அறுக்க முயல்கிறார்களோ அதே கத்தியால் இலங்கையின் குரல்வளையை அறுப்பதுதானே அறிவுடைமை! அதைத்தான் செய்ய வேண்டும் என்கிறேன் நான்.
ஈழத்தில் நடந்தது போர் அல்ல…. திட்டமிட்ட இனப்படுகொலை. விஜய் – முருகதாஸின் மன்னிப்புப் படலத்தின் மூலம், இந்த நிதர்சனத்தை ஊரறியப் பறைசாற்ற முடியும். ‘இனப்படுகொலை செய்தவர்களின் கூட்டாளிகள் பணத்தில் படம் எடுத்ததற்காக 10 கோடி தமிழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கிறோம்’ என்று விஜயும் முருகதாஸும் அறிவிப்பது உலகெங்கும் இருக்கிற எங்கள் தமிழ் உறவுகளுக்கு ஆறுதலாக இருக்குமா இருக்காதா? இந்தக் கேள்வியை, ‘லைக்காமொபைல் பெயரை நீக்கிவிட்டால் தமிழன் கழுத்தில் கத்தி வைக்க அனுமதித்துவிடலாம்’ என்று மனசாட்சியைத் தியாகம் செய்துவிட்டு பேசுகிற நண்பர்கள் கவனத்துக்கு விட்டுவிடுகிறேன்.
எது சாத்தியமோ அதைத்தான் இலக்காக வைத்துக் கொள்ளவேண்டும் – என்பது சிலரது வாதம். விஜய் மன்னிப்பே கேட்கமாட்டார் என்றா நினைக்கிறார்கள் இவர்கள்? சென்ற பட வெளியீட்டின் போது, ஆழ்ந்த அரசியல் ஞானம் கொண்ட தன்னுடைய தந்தையுடன் கொடநாட்டுக்கே போய்வந்தாரே இளைய தளபதி…… மறந்துவிட்டார்களா இவர்கள்!
பிரச்சினை எழுந்தவுடன், தங்கள் தவறை ஒப்புக்கொள்ளாமல் ‘இனப்படுகொலை செய்தவர்கள் பணத்திலா படமெடுப்போம்…….. தமிழர்களின் ரத்தத்தை விற்றா பிழைப்போம்’ என்றெல்லாம் தடாலடியாகப் பேசியவர்கள் மனம் விட்டு மன்னிப்புக் கேட்பது தானே முறை! அதை விட்டு விட்டு, லைக்காமொபைல் பெயரை எடுத்துவிட்டு வேறொரு பெயரைப் போட்டுக் கொள்வது – என்பது, குழந்தைக்குத் தகப்பன் யார் என்பது ஊரறியத் தெரிந்தபிறகு வேறொருவனது இனிஷியலைப் பயன்படுத்தும் அயோக்கியத்தனத்தைப் போல் அருவருப்பானதா இல்லையா?
சென்னைக் கூட்டத்தில் மூன்று விஷயங்களை நான் வலியுறுத்தினேன்.
ஒன்று – விஜயும் முருகதாஸும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பது.
இரண்டு – கத்தி வெளியாகும் திரையரங்குகளில் இனப்படுகொலை தொடர்பான ஆவணப்படம் ஒன்றைத் திரையிடுவது. (அந்த ஆவணப் படத்தை உருவாக்கும் பொறுப்பை முருகதாஸிடமே விடுவது.)
மூன்றாவது,- கத்தி படத்தின் முதல் 3 நாள் வசூல் தொடர்பானது.
விஜய் தமிழக மக்களின் மனம் கவர்ந்த நட்சத்திரம். அவரது காதலுக்கு மரியாதை செய்யாதவர் யார்? அவரது படத்துக்கு முதல் 3 நாள் வசூல் என்ன என்பது பச்சைக் குழந்தைக்குக் கூடத் தெரியும். அந்த 3 நாள் வசூலை, இனப்படுகொலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட எம் ஈழத்து உறவுகளுக்குச் செலவிடுவதற்காகக் கொடுத்துவிடவேண்டும் என்பது என் வேண்டுகோள். எப்படியும் விஜய் – முருகதாஸ் வெற்றிக் கூட்டணியில் கத்தி பிய்த்து உதறப்போகிறது. முதல் மூன்று நாள் வசூலைக் கொடுத்துவிடுவதால் என்ன குறைந்துவிடப் போகிறது?
இதைத்தான் தெள்ளத்தெளிவாகக் கேட்கிறேன் நான்.
லைக்கா மொபைல் பெயரை மாற்றிவிட்டாலே அது நமக்கு வெற்றிதானே – என்கிற குழப்பக் கூத்தின் மூலம், இரண்டு பிரபல கலைஞர்கள் மூலம் இனப்படுகொலையை அம்பலப்படுத்தக் கிடைக்கிற வாய்ப்பைத் தியாகம் செய்ய முயல்கிறார்கள் நண்பர்கள். அயோக்கியத்தனத்துக்குத் துணைபோகிற எந்த அறிவையும், நியாயம் கேட்கத் துடிக்கிற ஓர் இனம் துடைப்பத்தால் பெருக்கியெடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டுவிடும் என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.
“தமிழருக்கான தாயகம் தான் முக்கியம், அதை அடைவது தான் லட்சியம், அதுதான் இலக்கு, வேறு பக்கம் நமது கவனம் திசை திருப்பப்பட்டு விடக் கூடாது” – என்றெல்லாம் நம் மீதே குற்றப்பத்திரிகை வாசிப்பவர்கள்….. கத்தி குறித்து நமக்கு புத்தி புகட்ட முற்படக் கூடும். ராஜபக்சே, லைக்காமொபைல் போலவே இவர்கள் விஷயத்திலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாருக்காக இவர்கள் பேச வருகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொண்டால் போதும். நீதி கேட்கிற ஒரு கூட்டத்தை, நியாயம் கேட்கிற ஒரு கூட்டத்தை, ஒரே ஒரு அயோக்கிய சிகாமணியின் குரல் அசிங்கப்படுத்தி விடும். ஓநாய்க்கும் வாலிருக்கிறது என்பதற்காக அது ஆடாகிவிடுகிறதா என்ன? அந்த வாலுக்கும் இந்த வாலுக்கும் வித்தியாசம் பார்க்க வேண்டாமா?
இனம் – என்கிற என் இனத்தைக் கொச்சைப்படுத்தும் ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டபோது, ‘இதை விடப் பெரிதாக ஈழத் தமிழர்களுக்கு யாரும் எதுவும் செய்துவிட முடியாது’ என்று வரவேற்பு வளையம் கட்டியவர்கள், நமக்காக மண மாலை கட்டுவார்களா, மலர் வளையம் கட்டுவார்களா?
இவ்வளவு அயோக்கியத் தனங்களுக்கு இடையிலும், தமிழினத்தின் இலக்கு தெளிவாகத்தான் இருக்கிறது. நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு நடத்துகிற நீண்ட நெடிய பயணத்தின் போது, வழியிலிருக்கிற கள்ளை முள்ளையெல்லாம் களையெடுத்தால் மட்டுமே இலக்கை அடைவது சாத்தியமாகும் என்பதை என் இனம் முழுமையாக உணர்ந்திருக்கிறது. நடந்தது இனப்படுகொலை என்பதை உலகுக்கு உணர்த்தினால் மட்டுமே, தமிழர் தாயகம் எளிதில் சாத்தியமாகும். விஜயின் கையிலிருக்கிற சிங்களக் கத்தியைக் கூட நமக்கான கருவியாக நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இளைய தளபதி தம்பி விஜய், அரசியல் நோக்கம் அறவே இல்லாமல் பேசுகிறவர்களின் மொழியைப் புரிந்து கொள்வது நல்லது. நடந்துவிட்ட தவறுக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதால் அவரது மரியாதை ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை. கேட்க மறுத்தால்தான், அவர் யாருக்குத் தளபதி என்கிற விரும்பத் தகாத கேள்வி, அவரே விரும்பாவிட்டாலும் எழும்!

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment