தமிழகத்தின் வேலூர் அரசு மருத்துவமனையில் இறந்து விட்டதாகக் கூறப்பட்ட பெண் இறுதிச்சடங்கின் போது கண் விழித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ஷேனாஸ் (54) என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் (7) இரவு இறந்ததாகத் தெரிகிறது.
அவரது இறப்பை மருத்துவர்கள் உறுதிப்படுத்தி உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதையடுத்து, நேற்று மாலை 5.30 மணியளவில் இறுதிச்சடங்குகள் இடம்பெற்றுள்ளன. உடல் மீது உறவினர்கள் தண்ணீர் ஊற்றிய போது, ஷேனாசின் கண்கள் லேசாக அசைந்துள்ளன, உதடுகள் மேலும் கீழுமாக அசைந்துள்ளன. இதனால் பயத்தில் உறவினர்கள் அலறினர்.
உடனே அவரது குடும்பத்தினர் வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவரை அழைத்து உடலை பரிசோதனை செய்துள்ளனர்.
பரிசோதித்த மருத்துவர், ஷேனாஸ் கோமா நிலையில் உள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் இறந்து விடுவார் என தெரிவித்துள்ளார்.
அதன்படி, சிறிது நேரத்தில் ஷேனாஸ் உயிர் பிரிந்து விட்டது. இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment