Search This Blog n

11 October 2015

தொழிலாளர்களின் 'மனம் திறந்த பேச்சை' எப்போது கேட்கப்போகிறார் மோடி

வெளிநாடுகளுக்கு சென்று அம்மக்களோடு பேசும் மோடி, நம் நாட்டு மக்களோடு 'மனம் திறந்த பேச்சு' நிகழ்ச்சி மூலம் பேசுகிறார். நமதுநாட்டின் விவசாயிகள், தொழிலாளர்களின் 'மனம் திறந்த பேச்சை' எப்போது கேட்கப்போகிறார் மோடி என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

ஹாவேரி மாவட்டம், ரானேபென்னூர் வட்டம், கதகூர் கிராமத்தில் நடந்த காங்கிரஸ் மகளிர் மற்றும் விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியது:

பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான 3 - 4 மிகப்பெரிய தொழிலதிபர் நண்பர்களுக்கு விவசாயிகளின் நிலம் தேவைப்படுகிறது என்பதுதான் உண்மை. இன்றைக்கு ரூ.1-2 லட்சம் விலைபோகும் விவசாய நிலங்கள், 8 - 10 ஆண்டுகள் கடந்த பிறகு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு பெறும் என்று அந்த தொழிலதிபர்களுக்கு தெரியும். அதனால் ஏதாவதொரு ஒரு காரணத்தை காட்டி விவசாயிகளின் நிலத்தை கைப்பற்ற துடியாய் துடிக்கிறார்கள்.

மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 40 - 45 எம்பிக்கள் இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் கட்சியோடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கைகோர்த்திருக்கிறார்கள். விவசாயிகளின் சக்தியை மோடி உள்பட பாஜகவினர் அறியாதிருக்கிறார்கள்.

நிலங்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய முடியாவிட்டால், நிலங்களை பறிப்பதற்காக விவசாயிகளை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். விவசாயிகளை கூலித்தொழிலாளர்களை பலவீனப்படுத்துவதன் மூலம் நிலங்களை அபகரிக்க திட்டமிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திரமோடிக்கு விலை உயர்ந்துகொண்டே போகும் விவசாயிகளின் நிலம் தேவைப்படுகிறது. நிலத்தை
 அபகரிக்கும் வரை குறைந்தப்பட்ச ஆதரவுவிலையை பிரதமர் மோடி உயர்த்தமாட்டார். அதேபோல, பயிர்க்கடனை தள்ளுபடி செய்யமாட்டார், விவசாயிகளுக்கு உதவிசெய்யமாட்டார். இந்திய விவசாயிகளை பலவீனப்படுத்தி கூலித்தொழிலாளர்களாக மாற்றிவிட்டு, விளைநிலங்களை ஒருசில தொழிலதிபர்களுக்கு தாரைவார்ப்பதே மோடியின் திட்டமாகும். இதுநடக்க காங்கிரஸ் அனுமதிக்காது.

நாடு முழுவதும் விவசாயிகள் பிரச்னை உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி நடக்கிறது. ஆனால் விவசாயிகளும் தொழிலாளர்களும் இது நமது அரசு அல்ல என்று கூறுகிறார்கள். இது வேறு யாருக்கோ (பெருமுதலாளிகள்) பணியாற்றும் அரசாக உள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள் பலவீனமாக காங்கிரஸ் அனுமதிக்காது.

விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகள் அழுகிறார்கள். ஆனால் நமது பிரதமர் மோடி உலக நாடுகளை சுற்றிவருகிறார். மோடியின் விமானம் சில நேரம் அமெரிக்காவிலும், சில நேரம் சீனாவிலும், சில நேரம் இங்கிலாந்திலும் பற்பல நாடுகளிலும் நிற்கிறது. விமானத்தில் இருந்து கீழே இறங்கும் மோடி கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, திரும்புவார். மோடி தொழிலதிபர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார், கைகுலுக்கிறார்.

கடந்த ஓராண்டாக 'இந்தியாவில் உற்பத்தி செய்வோம்', 'தூய்மை இந்தியா' குறித்து மோடி பேருரையாற்றுகிறார். ஆனால் விவசாயியுடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டதை நான் பார்க்கவில்லை. அழுக்கு துணியோடும், கொப்பளம் காய்ச்சிய கரங்களோடும் உள்ள விவசாயிகளுடன் நேரம் செலவிட மோடிக்கு நேரமில்லை. இதை நான் சுட்டிக்காட்டியிருப்பதால், இனிமேல் விவசாயிகள், தொழிலாளர்களுடன் மோடி புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். பிரதமர் மோடி ஏழைகளை சந்திப்பதாக பாஜகவினர் கூறுகிறார்கள். ஆனால் விவசாயிகளிடம் பணமில்லாததால், அவர்களை மோடி சந்திப்பதில்லை.

வெளிநாடுகளுக்கு சென்று அம்மக்களோடு பேசும் மோடி, நம் நாட்டு மக்களோடு 'மனம் திறந்த பேச்சு' நிகழ்ச்சி மூலம் பேசுகிறார். நமதுநாட்டின் விவசாயிகள், தொழிலாளர்களின் 'மனம் திறந்த பேச்சை' எப்போது கேட்கப்போகிறார் மோடி. மோடி கேட்கிறாரோ இல்லையோ, இந்திய விவசாயிகள், தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் துணைநிற்கும். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்புள்ள பயிர்க்கடனை தள்ளுபடி செய்தோம். விவசாயிகள், தொழிலாளர், ஏழைகளை மதம், ஜாதி, மொழிரீதியாக பாகுபடுத்தும் அணுகும் வழக்கம் காங்கிரசுக்கு இல்லை.

பாஜகவினருக்கு கர்நாடக விவசாயிகள், இந்திய விவசாயிகள் அல்ல. கர்நாடக விவசாயி சங்கடத்தில் இருந்தால் அது குறித்து பாஜகவினர் கவலையடையமாட்டார்கள். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, விவசாயிகளின் நலன்கருதி நில கையக சட்டமசோதாவை அறிமுகம் செய்தது. ஆனால் விவசாயிகளுக்கு எதிரான நில கையக சட்டமசோதாவை 3 முறை அவசரசட்டமாக செயல்படுத்தியது பாஜக அரசு. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தால், அந்த சட்டமசோதாவை கைவிடுவதாக மோடி அறிவித்தார்.

தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு நமக்கு தேவை. தொழிற்சாலைகளை அமைக்க போதுமான நிலம் அரசிடம் உள்ளது. ஆனால் விளைநிலங்களை அபகரிக்கவே சதி செய்கிறார்கள் என்றார் அவர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

Post a Comment