இந்திய சுதந்திர தினம் 15-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் சிறப்பான தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சுதந்திர தின கொடியேற்றம் மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சிகளுக்காக தலைநகர் டெல்லியில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் டெல்லியில் நாசவேலைகளில்
ஈடுபடுவதற்காக பாகிஸ்தான் தீவிரவாதிகள் 9 பேர் அங்கு நுழைந்திருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது. ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்கள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இந்த தீவிரவாதிகள் நுழைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு எச்சரிக்கை
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் கடந்த மாதம் அரங்கேற்றப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, டெல்லியில் இந்த தீவிரவாதிகள் நுழைந்திருப்பதாக உளவு தகவல்கள் கூறுகின்றன. டெல்லியில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைப்பதற்காக இந்த தீவிரவாதிகள் நுழைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க விழிப்புடன் இருக்குமாறு அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களையும் மத்திய அரசு எச்சரித்து உள்ளது.
3 மாதங்களுக்கு முன்னரே...
பஞ்சாப் தாக்குதலுக்கு பிறகு தான் டெல்லியில் தீவிரவாதிகள் நுழைந்திருந்தாலும், அவர்களுக்கான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் அனைத்தும் 3 மாதங்களுக்கு முன்னரே டெல்லிக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையால் டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
0 கருத்துகள்:
Post a Comment