இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கையர்கள் முன்கூட்டியே விசா எடுக்காமல் இந்தியா வந்திறங்கிய பின் விசா பெற்றுக்கொள்ளும் நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து இந்தியா செல்பவர்கள் முன்கூட்டியே விசா அனுமதி வேண்டியதில்லை என்றும், அங்கு சென்றவுடன் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது இது நடைமுறைக்கு வந்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
கடந்த மாதம் 14 ஆம் தேதி இந்தியப் பிரதமர் அறிவித்ததற்கு அமைவாக ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் இந்தியா செல்லும் பயணிகள், இந்தியாவுக்குச் சென்றதன் பின்னர் விசா பெற்றுக்கொள்ள முடியும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஆயினும், இராஜதந்திர அலுவலக மட்டத்திலான கடவுச்சீட்டைக் கொண்டிருப்பவர்களும், பாகிஸ்தானிய வம்சாவளி இலங்கை பிரஜைகளும், இந்தியாவில் தொழில் செய்பவர்கள், அங்கு வசிக்கின்ற இலங்கைப் பிரஜைகள் ஆகியோர் இந்த இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க முடியாது என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு தடவை மாத்திரமே பிரயாணம் செய்யக் கூடிய இந்த முறையின் மூலம் பெறுகின்ற விசா 30 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் இந்தியத் தூதரகம் கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது.
இந்த நடைமுறையின் மூலம் பெங்களுரூ, சென்னை, டெல்லி, கோவா, ஹைதராபாத், கொச்சி, கொல்கொத்தா , மும்பை, திருவனந்தபுரம் ஆகிய 9 விமான நிலையங்களின் வழியாக மாத்திரமே இந்தியா செல்ல முடியும். எனினும் இந்த நடைமுறையின் மூலம் விசா பெறுபவர்கள், இந்தியாவில் இருந்து வெளியேறும்போது கட்டுப்பாடுகளின்றி, எந்தவொரு விமானத்தளத்தின் வழியாகவும் அங்கிருந்து பிரயாணத்தை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
0 கருத்துகள்:
Post a Comment