பெங்களூரில் இருந்து ஐதராபாத்துக்கு கடந்த மாதம் 30ம் திகதி இரவு தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்றது.
ஆந்திராவில் உள்ள மகபூப்நகர் அருகே சாலையோர சுவரில் மோதியதால் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
இதில் 45 பயணிகள் உடல் கருகி பலியாகினர். இந்த விபத்து பற்றி ஆந்திர மாநில தடய அறிவியல் பரிசோதனை மைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் விவரங்களை இந்த மையத்தின் இயக்குனர் சாரதா வெளியிட்டு இருக்கிறார்.
அதில், சாலையோரத்தில் தடுப்புக்காக அமைக்கப்பட்டுள்ள சுவற்றின் வெளிப்பகுதியில் 26 அடி நீளத்துக்கு பலமான தண்டவாளம் புதைக்கப்பட்டு இருந்துள்ளது.
இரவு நேரத்தில் வேகமாக சென்றதால் பேருந்தின் கட்டுப்பாட்டை டிரைவர் சில நொடிகள் இழந்துள்ளார்.
அப்போது, பேருந்தின் வலது பின்பக்க பகுதி தண்டவாளத்தின் மீது பலமாக மோதியதால் தண்டவாளம் இரண்டாக உடைந்துள்ளது.
அதில் ஒரு பகுதி, பேருந்தின் டீசல் டேங்க்கை குத்தி கிழித்ததால் டீசல் வெளியே கொட்டியுள்ளது.
தண்டவாளத்தின் அடுத்த பாதி, பேருந்தில் சிக்கிக் கொண்டு சாலையில் உரசியபடி சென்றுள்ளது.
இதனால் ஏற்பட்ட உராய்வால் வெப்பம் உருவாகி டீசல் தீப்பற்றியுள்ளது.
60 முதல் 100 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் பட்டால், டீசல் தானாகவே தீப்பிடிக்கும் தன்மை கொண்டது.
வலது பக்க டீசல் டேங்கில் பற்றிய தீ, பேருந்தின் இடது பக்கமுள்ள டீசல் டேங்குக்கும் பரவி உள்ளது.
இதன் காரணமாக அதிலிருந்த டீசலும் தீப்பற்றி, பின்பக்கமுள்ள ஏசி இயந்திரத்துக்கு பரவி இருக்கிறது.
இதனால் ஏசி இயந்திரம் மூலமாக பேருந்துக்குள் கார்பன் மோனாக்சைடு விஷவாயு பரவியுள்ளது, இதை பயணிகள் சுவாசித்துள்ளனர்.
இதனால் இருக்கையிலேயே பெரும்பாலோர் மயங்கி விழுந்துள்ளனர்.
அவர்கள் சுதாரிப்பதற்குள் பேருந்து முழுவதும் தீப்பற்றி
கொண்டு, கொழுந்து விட்டு எரிந்ததால் மயங்கிய நிலையிலேயே தீயில் கருகி இறந்துள்ளனர்.
பெரும்பாலான பயணிகள் இருக்கையில் அமர்ந்தபடியே கருகி இறந்து கிடந்ததற்கு இதுதான் காரணம் என்பது முதல் கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
தீ விபத்துக்கு வெடிபொருள்கள் காரணமில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
மேலும் விபத்தின்போது டிரைவர் பெரோஸ் பாஷா, கிளீனர் மற்றும் 3 பயணிகள் பேருந்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர், டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருந்தை ஓட்டியபோது இவர் மது குடித்திருந்தாரா என்பதை அறிய, அவருடைய ரத்தத்தை எடுத்து தடய அறிவியல் நிபுணர்கள் பரிசோதனை செய்ததில், அவர் மது குடிக்கவில்லை என்று உறுதியாகி இருக்கிறது.
0 கருத்துகள்:
Post a Comment