இந்தியாவிலேயே பாரம்பரியமிக்க கோவில்களையும், சிற்பங்களையும் பெற்று கலையம்சம் கொண்ட பகுதியாக தமிழகம் திகழ்கிறது.
தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த கல்வெட்டுக்களும், இலக்கியங்களும் காணக் கிடக்கின்றன.
இங்கு பல்வேறு இயற்கை வளங்கள், திராவிடக் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன.
இவற்றில் அனைவரும் வியக்கத்தக்க வகையில் அமையப் பெற்றது தான் மாமல்லபுரம்.
கல்லிலே கலைவண்ணம் கண்ட இந்த மாமல்லபுரமானது சென்னையிலிருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ளது.
மகேந்திரபல்லவராலும், மாமல்லநரசிம்மராலும் தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட பொக்கிஷம்.
கடற்கரையோரத்தில் அமைந்துள்ள அழகிய கற்கோயிலானது இது, காண்போரின் கண்களை வெகுவாக கவர்கிறது.
இந்திய மக்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டவரின் கண்களுக்கும் விருந்தளிக்கும் இக்கோயில் பற்றிய அருமைகள் ஒவ்வொன்றையும் எடுத்துச் சொன்னால் ஒரு யுகம் வேண்டுமென்றே சொல்லலாம்.
கடற்கரை கோவில்
மாமல்லபுரம் என்றவுடனேயே அலைகள் தொட்டுச் செல்லும் கடற்கரை கோவில்தான் முதலில் நினைவுக்கு வரும்.
ஆனந்தமும், ஆன்மீகமும் தழுவும் இந்தக் கடற்கரைக் கோவில் இரண்டு சிவன்கோவில்களை உள்ளடக்கியதாகும். இவை கி.பி. 700- 728க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை.
பஞ்ச ரதம்
நிஜத்தேர் போன்று காணப்படும் கோவில் வடிவிலான இந்த ரதங்கள் ஒவ்வொன்றும் ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்டவை.
இவற்றுக்கு தர்மராஜ ரதம், பீம ரதம், திரௌபதி ரதம், நகுல- சகாதேவ ரதம் என பஞ்ச பாண்டவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
தர்மராஜ ரதத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம், அழகும் ஆச்சரியமும் கலந்தது.
அர்ச்சுனன் தபசு
சுமார் 30 மீட்டர் உயரமும், சுமார் 60 மீட்டர் அகலமும் கொண்ட சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே அர்ச்சுனன் தபசு என்றழைக்கப்படுகிறது.
வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் என பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன.
ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே சூலாயுதம் ஏந்திய சிவன் பூதகணங்கள் சூழநின்று வரம் கொடுப்பதாக சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
இது பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக சிவனை நோக்கி அர்ச்சுனன் தவமிருந்ததை குறிப்பதால் அர்ச்சுனன் தபசு என்றழைக்கப்படுவதாக ஒரு கருத்தும் உண்டு.
மகிஷாசுரமர்த்தினி சிற்பம்
கலங்கரை விளக்கத்துக்கு செல்லும் வழியில் குன்றின் மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது.
இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பம் சிறப்பு வாய்ந்தது. மகிஷாசுரமர்த்தினி என்றழைக்கப்படும் சக்தி, மகிஷாசுரனை வதம் செய்ய பத்து கைகளுடன் தோன்றும் காட்சி இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபம்.
இவை தவிர வராகமூர்த்தி சிற்பம், கோவர்த்தன மலை சிற்பம் போன்றவையும் நிறைய ஆச்சரியங்கள் கொண்டவை.
இப்படி சிறப்பு வாய்ந்த மகாபலிபுர நினைவுச் சின்னங்களை 1984ம் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோ அறிவித்தது.
தமிழகத்திற்கு அழியாப் புகழ் அளிக்கும் வகையில் அமைந்துள்ள மாமல்லபுரத்தின் அற்புத சிலைகள் 300 ஆண்டுகளாகியும் பொலிவுடன் காணப்படுவது வியப்புக்குறிய விடயமாகவே உள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment