இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் சுமார் 40 நாடுகள் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த மகிந்த ராஜபக்ச நடத்தும் அந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்ட சபையில் இதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கிடையே காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்லலாம் என்று காங்கிரஸ் உயர் மட்டக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மன்மோகன் சிங்கின் இலங்கை பயணத்துக்கான ஏற்பாடுகளை வெளியுறவுத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்வதற்கு மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோனி, ஜி.கே.வாசன் ஆகிய மூன்று பேரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மற்றும் வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகள், காமன்வெல்த் மாநாட்டில் எப்படியாவது பிரதமரை கலந்து கொள்ள வைத்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். பிரதமரின் இலங்கை பயணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் அவர்கள் செய்து முடித்து விட்டனர்.
காமன்வெல்த் மாநாட்டுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை செல்வாரா? மாட்டாரா? என்பதில் தொடர்ந்து கேள்விக்குறி நீடிக்கிறது.
பிரதமர் அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று நேற்று தி.மு.க. தலைவர் கலைஞரை சந்தித்த பிறகு மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
ஆனால் ராஜபக்சவுடன் நெருக்கமான உறவில் இருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள், மன்மோகன் சிங்கை கொழும்பு அழைத்து செல்வதில் இரகசிய வேலைகளை செய்து வருகிறார்கள்.
எனவே இந்த விஷயத்தில் பிரதமர் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் பிரதமர் தன் முடிவை தெரிவிப்பார் என்று தெரிகிறது.
இத்தகைய சூழ்நிலையில் கடைசிக் கட்ட ஈழப் போரின் போது விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும், பாடகியுமான இசைப்பிரியா மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட காட்சிகளை இங்கிலாந்தின் சனல்–4 ஒளிபரப்பியது. அதில் இசைப்பிரியா சித்திரவதை செய்யப்படும் காட்சிகள் உள்ளன.
இது உலக மனித உரிமை ஆர்வலர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இலங்கை நடத்தும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணியுங்கள் என்று உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக இந்தியா அந்த மாநாட்டில் பங்கேற்க கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment