Search This Blog n

25 November 2013

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு நியாயம் வேண்டும்:


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எழுந்துள்ள பிரச்சினையில் இனியாவது முழு விசாரணை நடத்தி இத்தனை ஆண்டுகள் சிறையிலே தன் இளம் பிராயத்தைச் செலவிட்ட பேரறிவாளனுக்கு நியாயத்தை வழங்கிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
   
கேள்வி:-ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் வாக்குமூலத்தை மாற்றம் செய்ததாக இந்த வழக்கைப் புலன் விசாரணை செய்த முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்புதல் அளித்திருப்பதாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?

பதில்:-சில குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்பது தான் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நெறியாகும். அந்த அடிப்படையில் தற்போது வெளியாகியுள்ள இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை ஏடுகளில் காணும்போது, நடந்து முடிந்த வழக்கு விசாரணையிலும், அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பிலும் மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. எனவே இனியாவது இதைப்பற்றி முழு விசாரணை நடத்திட அரசு முன்வரவேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இத்தனை ஆண்டுகள் சிறையிலே தன் இளம் பிராயத்தைச் செலவிட்ட பேரறிவாளனுக்கு நியாயத்தை வழங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி:-வேளாண்துறையில் உர சப்ளை செய்ய டெண்டர் விட்டதில் பேரம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு விட்டதாகச் செய்தி வந்திருக்கிறதே?
பதில்:-தமிழக விவசாயிகளுக்கு நீரில் கரையும் உரங்கள் வழங்க மத்திய அரசு ஆண்டு தோறும் நிதி ஒதுக்குகிறது. இதைக் கொண்டு கரும்பு, வாழை விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் நீரில் கரையும் உரங்கள் வழங்கப்படுகின்றன.

இதற்கான நிதி, மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டு, வேளாண்துறை மூலமாக உரம் இறக்குமதி செய்து சப்ளை செய்வதற்கான 'டெண்டர்' விடப்படவேண்டும். இந்த ஆண்டில் இதற்காக மத்திய அரசு தமிழகத்துக்கு 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறது. உரம் சப்ளை செய்ய நான்கு மாதங்களுக்கு முன்பு டெண்டர் கோரப்பட்டது.

என்ன 'காரணத்தாலோ' அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து மீண்டும் இரண்டு முறை 'டெண்டர்' கோரப்பட்டு, அவைகளும் முறையான காரணம் தெரியாமலேயே ரத்து செய்யப்பட்டன. தற்போது நவம்பர் 27-ல் நான்காவது முறையாக டெண்டர் கோரப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
நான்காவது முறையாவது டெண்டர் உறுதி செய்யப்படுகிறதா என்று பார்ப்போம். ஆனால் இவர்கள் டெண்டர் உறுதி செய்வதற்குள், இந்த ஆண்டு வேளாண்மை முடிந்துவிடும் என்கிறார்கள் விவசாயிகள்.
கேள்வி:-மின் உற்பத்தி பாதிப்பு என்ற செய்தி மட்டும் அன்றாடம் வந்து கொண்டிருக்கிறதே? அந்தத் துறைக்கான அமைச்சர் அதையெல்லாம் கவனிக்கிறாரா இல்லையா?

பதில்:- மின்துறையிலேயே அமைச்சர் கவனிப்பது வேறு ஒரு பணியை, அதை அவர் முறையாகக் கவனித்து வருகிறாராம். 19.11.2013 அன்று வந்த செய்திப்படி, மின் உற்பத்தி பாதிப்பு என்பது வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஏற்பட்டுள்ளது.
வடசென்னை அனல் மின் நிலையத்தில், இரண்டாவது அலகில் உள்ள நிலக்கரி எடுத்துச் செல்லும் பாதையில் ஓட்டை ஏற்பட்டு, அதை சரி செய்யாமல் அலட்சியமாக விட்ட காரணத்தினால், கொதிகலனுக்கு எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாய் தீப்பற்றியுள்ளது.

இதன் காரணமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படாவிட்டாலும், இரண்டாவது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களில் இந்தப் பணி சரி செய்யப்பட்டு, மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்களாம்.

சட்டமன்றத்தில் மின்துறை அமைச்சருக்குப் பதிலாக நீண்ட நேரம் பதிலளித்த முதல்-அமைச்சர் தமிழ்நாடு விரைவில் மின் மிகை மாநிலமாக மாறும் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது தமிழ்நாட்டு ஏடுகளைப் புரட்டினால், தமிழ்நாடு மின் மிகை மாநிலமா? மின் பகை மாநிலமா? என்றுதான் சந்தேகம் வருகிறது.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்
 

0 கருத்துகள்:

Post a Comment