Search This Blog n

18 June 2013

மத்திய அமைச்சரவை மாற்றம்: 8 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு


   ரயில்வே அமைச்சராக மல்லிகார்ஜுன கார்கேவும், புதிதாக 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.

 குடியரசுத் தலைவர் மாளிகையில் திங்கள்கிழமை மாலை புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

 புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆஸ்கர் பெர்னாண்டஸ், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிரிஜா வியாஸ், சிஸ்ராம் ஓலா, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கே. சாம்பசிவ ராவ் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

 தமிழகத்தைச் சேர்ந்த இ.எம். சுதர்சன நாச்சியப்பன், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மாணிக்ராவ் கேவிட், ஆந்திரத்தைச் சேர்ந்த ஜேசுதாசு சீலம், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் செüத்ரி ஆகியோர் இணையமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 கார்கேவுக்கு ரயில்வே: மல்லிகார்ஜுனே கார்கேவுக்கு ரயில்வே துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் முன்பு வகித்து வந்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை பொறுப்பு, சிஸ்ராம் ஓலாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

 திமுக வசம் இருந்த பொறுப்பு காங்கிரஸிடம்: கடந்த மார்ச் மாதம் மத்திய அரசுக்கு அளித்த வந்த ஆதரவை திமுக வாபஸ் பெற்றது. அப்போது, திமுக வசம் இருந்த நான்கு இணையமைச்சர்களின் பதவிகள் தற்போது காங்கிரஸ் அமைச்சர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
  ஜெகத்ரட்சகன் வகித்து வந்த வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் பதவி தற்போது சுதர்சன நாச்சியப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2004 முதல் 2013-ஆம் ஆண்டு வரை பழனிமாணிக்கம் வகித்து வந்த மத்திய நிதித் துறை இணையமைச்சர் பதவி ஜேசுதாசு சீலமுக்கும், காந்தி செல்வன் வகித்து வந்த சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சர் பதவி சந்தோஷ் செüத்ரிக்கும், நெப்போலியின் வகித்து வந்த சமூக நீதித் துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை மாணிக்ராவ் கேவிட்டுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  மு.க. அழகிரி வகித்து வந்த மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர பதவி, அத்துறை இணையமைச்சராக உள்ள ஸ்ரீகாந்த் ஜனாவிடமே (தனிப்பொறுப்பு) உள்ளது. அதில், மாற்றம் செய்யப்படவில்லை.
  தமிழகத்துக்கு வாய்ப்பு: புதிய அமைச்சர்கள் பட்டியலில் தமிழகம், பஞ்சாப், ராஜஸ்தான், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திர மாநிலங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிதாகப் பதவியேற்ற 8 அமைச்சர்களில் 2 பேர் பெண்கள் ஆவர்.
  சுதர்சன நாச்சியப்பன் 1999-ஆம் ஆண்டு சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானர். பின்னர் 2010-ல் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, அவருக்கு முதல் முறையாக மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞராக அவர் பணியாற்றி உள்ளார். மனித உரிமைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பை நிறுவி நிர்வகித்தும் வருகிறார்.

 கேபினட் அமைச்சர்கள்
  ஆஸ்கர் பெர்னாண்டஸ் - மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்
 சிஸ்ராம் ஓலா - மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர்
  கிரிஜா வியாஸ் - மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர்
  சாம்பசிவ ராவ் - மத்திய ஜவுளித் துறை அமைச்சர்
  சுதர்சன நாச்சியப்பன் - வர்த்தகம் மற்றும் தொழில் துறை
  சந்தோஷ் செüத்ரி -  சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை
  ஜேசுதாசு சீலம் - நிதித் துறை
  மாணிக் ராவ் கேவிட் - சமூக நீதித் துறை மற்றும் அதிகாரமளித்தல்

 

0 கருத்துகள்:

Post a Comment