Search This Blog n

18 June 2013

பருவமழை பல மாநிலங்களில் வெறியாட்டம்: டில்லி, மும்பை, திருவனந்தபுரத்தில் கடும் பாதிப்பு


 
தமிழகத்தை மட்டும் பாராமுகமாக இருக்கும் தென் மேற்கு பருவமழை, நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக பெய்து, அப்பகுதிகளை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், பல மாநிலங்களில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. "மழை தொடரும்' என, அறிவிக்கப்பட்டுள்ளதால், பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
  இம்மாதம், 1ம் தேதி துவங்கிய தென் மேற்கு பருவமழை, முதலில் கேரளாவில் துவங்கி, தமிழகத்தின் தென் மாவட்டங்களை குளிர்வித்து, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா என, பிற மேற்கு மாநிலங்களுக்கு சென்று விட்டது. இரண்டு நாட்களுக்கு முன், டில்லியில் பருவமழை பெய்யத் துவங்கியதை அடுத்து, நாடு
 முழுவதும், பருவமழை பெய்து விட்டதாக, தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 டில்லி : தலைநகர் டில்லியில், கடந்த நான்கு மாதங்களாக, கொளுத்தி எடுத்த வெயில், இரண்டு நாள் தொடர்ந்து பெய்த மழையால் காணாமல் போனது. நேற்று முன்தினம் அதிகாலை துவங்கி, நேற்று இரவு வரை, இடைவிடாது மழை பெய்ததால், குளிர்ச்சியான சீதோஷ்ணம் பொதுமக்களை வருடியது.
 எனினும், திடீரென வானம் பொத்துக்கொண்டு கொட்டும் என எதிர்பார்க்காததால், முன்னேற்பாடுகள் சரிவர செய்யப்படாததால், வெள்ளமென சாலைகளில் மழை நீர் ஓடியது. இதனால், பாதசாரிகளும், பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலத்த மழையால், சர்வதேச விமான நிலையத்தின் இயல்பான பணிகளும் முடங்கின.

 மும்பை : கடந்த மூன்று நாட்களாக, தென் மேற்கு பருவமழை, தன் வெறியாட்டத்தை காட்டியதால், மழை நீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. தொடர்ந்து மழை பெய்த வண்ணமாக இருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநகரின் நரம்புகள் போல இயங்கும், ரயில்கள் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளியிடங்களுக்கு செல்லும் ரயில்கள் மட்டுமின்றி, மாநகருக்குள் பயணிக்கும் ரயில்களும், 4 மணி நேரம் முதல், 6 மணி நேரம் வரை தாமதமாக இயங்கின. பலத்த வேகமாக காற்றடிப்பதால், சாலைகளில் ஏராளமான மரங்கள் விழுந்துள்ளன. வரும் நாட்களில், இன்னும் மழை தீவிரம் அடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மட்டுமின்றி, மகாராஷ்டிரா மாநிலத்தில் பல இடங்களிலும், பரவலாக பருவமழை பெய்து வருகிறது.

 இமாச்சல் : இமாச்சல பிரதேசத்தில், கடந்த, ஐந்து நாட்களாக இடைவிடாது, பலத்த மழை பெய்கிறது. இதனால், மலைகள் சூழ்ந்த அந்த மாநிலத்தில், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
 வெயிலில் இருந்து தப்பிக்க, அந்த குளுகுளு மாநிலத்திற்கு வந்த, 1,000த்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், வெளியிடங்களுக்கு செல்ல முடியாத வகையில், நிலச்சரிவும், சாலை துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது.

 முதல்வர் தவிப்பு : மண்டி லோக்சபா இடைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் வீரபத்ர சிங், அந்த பகுதியை விட்டு வெளியேற முடியாமல் தவித்தார். ஹெலிகாப்டர்களும் இயக்க முடியாத அளவிற்கு, பலத்த மழை கொட்டியால், கங்கை நதி மற்றும் அதன் கிளை ஆறுகளில், கரைகளே தெரியாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 உத்தரகண்ட் : நான்கு நாட்களாக பலத்த மழை பெய்து வரும் உத்தரகண்ட் மாநிலத்தில், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனாத்ரி, ரிஷிகேஷ் போன்ற புனித தலங்களுக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் சொல்லொண்ணா துயரம் அடைந்துள்ளனர். எங்குமே நகர முடியாத அளவிற்கு, மழை வெளுத்து வாங்குகிறது. இதனால், புனிதமான, சார் தாம் யாத்திரை நிறுத்தப்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில், இந்தோ - திபெத் எல்லை போலீசார் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 அரியானா : பஞ்சாப், அரியானா மற்றும் இரு மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில், விடாது மழை பெய்து வருகிறது. அரியானாவில், யமுனை நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், யமுனா நகர் பகுதியில், 52 பேர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்; அவர்களை, ராணுவத்தினர் மீட்டனர். விமானப்படை ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டு, இரண்டு நாட்களாக, தண்ணீரில் தத்தளித்த பொதுமக்கள் பத்திரமாக
 மீட்கப்பட்டனர்.

 திருவனந்தபுரம் : தென் மேற்கு பருவ மழை துவங்கிய, கேரளாவில், கடந்த, 16 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், மாநிலமே முடங்கியுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு, வீடுகள் இடிந்து சேதம் ஏற்பட்டுள்ளது; மழைக்கு பலர் பலியாகியுள்ளனர்; பல விதமான காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் தலைநகர், திருவனந்தபுரத்தில், தேசிய பேரழிவு எதிர்ப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட உள்ளனர். நாடு முழுவதும், 50க்கும் மேற்பட்டோர், மழைக்கு பலியாகி உள்ளதாக,
 தகவல்கள் தெரிவிக்கின்றன

 

0 கருத்துகள்:

Post a Comment