தமிழக மக்கள் என்னிடம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் எல்லையில்லாத அன்போடு இருக்கிறார்களே என்று எண்ணிக் கொண்டிருந்ததால் தூங்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது 90-ஆம் பிறந்த நாள் விழாவினை, எந்த ஆண்டும் இல்லாத வகையில் மிகவும் சிறப்பாக திமுகவினர் ஒருங்கிணைந்து கொண்டாடினர்.
3 நாள்களாக நான் சரியாகத் தூங்கவில்லை. தமிழக மக்கள் என்னிடம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் எல்லையில்லாத அன்போடு இருக்கிறார்களே என்று எண்ணிக் கொண்டிருந்ததால் தூங்கவில்லை.
எங்கோ ஒரு கிராமத்தில், அதுவும் மிக சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். முரசொலிமாறன் தான் எங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரி.
எங்கள் குடும்பத்துக்கு என்று தனிப்பட்ட எந்தப் பெருமையும் கிடையாது.
ஆனாலும் 5 முறை முதல்வராகவும், 12 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியே பெறாமல் வெற்றி பெற்றிருக்கிறேன். அண்ணா மறைவுக்குப் பிறகு 1969-ஆம் ஆண்டிலிருந்து திமுகவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறேன்.
தமிழகத்தின் 7 கோடி மக்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே என்னை எதிரியாகக் கருதக் கூடியவர்கள். மற்றவர்கள் எல்லோரும் என்னிடம் அன்பு காட்டியிருக்கின்றனர்.
இந்தப் பெருமைக்கெல்லாம் காரணம் என் உழைப்புதான். மாநிலக் கட்சிகளில் ஒன்றின் தலைவராக இருந்த போதிலும், என்னை அறிந்துகொள்ளாத அகில இந்திய தலைவர்கள் இல்லை எனும் அளவுக்குப் பழகியிருக்கிறேன்.
இந்திரா காந்தி முதல் கொண்டு அனைத்து பிரதமர்களுடன் பழகியிருக்கிறேன். யாரும் என்னிடம் வெறுப்புக் காட்டும் அளவுக்கு நடந்தது இல்லை.
இத்தனைக்குப் பிறகும் நான் அகம்பாவம் கொண்டதில்லை. யாரையும் அலட்சியமாக நடத்தியதுமில்லை. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசியதில்லை. இவ்வளவு பேர் செலுத்தும் அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்பதுதான் 3 நாள்களாக என்னைத் தூங்கவிடாமல் எழுந்த கேள்வியாகும்.
இதற்குச் சொல்லும் பதில் தொடர்ந்து உழைப்பேன். உழைத்துக் கொண்டிருப்பேன் என்று தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment