Search This Blog n

03 June 2013

அமைச்சரவையில் மாற்றம்: மூத்த அமைச்சர்கள்.-


மத்திய மந்திரி சபையில் இருந்து கடந்த மார்ச் மாதம் தி.மு.க.வைச் சேர்ந்த மந்திரிகள் விலகினார்கள். இதையடுத்து கடந்த மாதம் ஊழல் புகார் காரணமாக ரெயில்வே மந்திரி பவன்குமார் பன்சாலும், சி.பி.ஐ. அறிக்கையை திருத்திய விவகாரத்தில் சட்ட மந்திரி அஸ்வினிகுமாரும் பதவியை ராஜினாமா செய்தனர்.
தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த மந்திரிகள் விலகலால் மத்திய அமைச்சரவையில் சில முக்கிய இலாகாக்கள் காலி இடங்களாக உள்ளன. இந்த காலி இடங்களுக்கு விரைவில் புதிய மந்திரிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கடந்த வெள்ளிக்கிழமை தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பும்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
இதையடுத்து புதிய மந்திரிகளாக யார், யாரை நியமனம் செய்யலாம் என்ற ஆலோசனை நடந்து வருகிறது. பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே இருப்பதால், காங்கிரஸ் மூத்த மந்திரிகள் சிலரை கட்சிப் பணிக்கு அனுப்புவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதும், மந்திரி சபை மாற்றம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். அடுத்த மாதம் (ஜூலை) முதல் வாரத்தில் உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அதற்கு முன்னதாக மந்திரிசபை மாற்றத்தை செய்ய பிரதமர் மன்மோகன்சிங் தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் இருவரும் 12-ந்தேதிக்குப் பிறகு ஜூன் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். எனவே மந்திரிசபை மாற்றம் வரும் 6-ந்தேதியில் இருந்து 12-ந்தேதிக்குள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மந்திரி சபையில் தற்போது பலர் கூடுதல் பொறுப்புகள் வகித்து வருகிறார்கள். இந்த பொறுப்புகள் பிரித்து கொடுக்கப்படும்போது, காங்கிரசை சேர்ந்த பலருக்கு மந்திரியாகும் வாய்ப்பு கிடைக்கும். மூத்த மந்திரிகள் கட்சிப் பணிக்கு செல்ல இருப்பதால் காங்கிரசைச் சேர்ந்த புதுமுகங்கள் சிலர் மந்திரி சபையில் இடம்பெற வாய்ப்புள்ளது
 

0 கருத்துகள்:

Post a Comment