வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய நிதியமைச்சகம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தியது.
இதனால் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்தது. நடப்பு கணக்கு பற்றாக்குறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற இந்திய வங்கிகள் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
தங்கம் இறக்குமதி சீரற்ற முறையில் உள்ளது. எனவே, தங்கத்தில் முதலீடு செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தங்கத்தின் மீதான ஆர்வத்தை குறைப்பதற்கு வங்கிகள் முக்கிய பங்காற்ற வேண்டும். அனைத்து வங்கிகளும் தங்கள் கிளைகளில் தங்கம் வாங்க வேண்டும் என்றோ, தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றோ வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கக் கூடாது.
தங்க நாணயங்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று நான் ஏற்கனவே வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறேன். தாமிரம் மற்றும் வெண்கலத்தைவிட தங்கம் சற்று பளபளப்பான ஒரு உலோகம் என்று மக்கள் கருதும் நாள் வரும் என்று நம்புகிறேன்.
சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்திருப்பது இந்தியாவுக்கு மோசமான செய்தி என்று ரிசர்வ் வங்கி கவர்னரிடம் நான் கூறினேன். நமது பயம் இப்போது உண்மையாகிவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 142 டன்கள் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மே மாதம் 162 டன் இறக்குமதி ஆகியுள்ளது. கடந்த ஆண்டில் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 70 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆணடு முதல் இரண்டு மாதங்களில் சராசரி 152 டன்னை எட்டியுள்ளது.
இப்படி இருந்தால் எப்படி தாங்க முடியும்? அந்த இறக்குமதிக்கான நிதியை எப்படி வழங்க முடியும்? உணவு பணவீக்கம் இப்போதும் அதிகரித்துள்ளது. ரபி பருவ அறுவடைக்குப் பிறகு அது குறையும் என நம்புகிறேன் என நிதியமைச்சர் மேலும் தெரிவித்தார்
0 கருத்துகள்:
Post a Comment