Search This Blog n

04 June 2013

பள்ளிகளிலும் தமிழ்வழிக் கல்வி

 
சென்னை, நுங்கம்பாக்கம் இலயோலா கல்லூரி வளாகத்தில் 01.06.2013 அன்று தமிழ் அறிஞர்கள், தமிழ் அமைப்புகள், ஆசிரியர் சங்கங்கள், சனநாயக ஆற்றல்கள் ஆகியோர் இணைந்து தமிழ்ச் சமுகக் கல்வி இயக்கம் சார்பாக தமிழ்ச் சமூகக் கல்வி இயக்கம், அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி - அரசு முடிவைக் கைவிடக் கோரி நடத்திய கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
தீர்மானம் : 1
வரும் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தேவையான அளவு ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு கடும் கண்டனத்திற்குரியது. தமிழே தெரியாத ஒரு தலைமுறை எதிர்காலத்தில் உருவாக இது வழிவகுக்கும். மேலும் தாய்மொழி வழியாகக் கல்வி கற்பதே அறிவு வளர்ச்சிக்கு உகந்தது எனப் பல்வேறு உலக அறிஞர்களும் கல்வி வல்லுனர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை அமைக்கப்பட்ட எந்தவொரு கல்விக்குழுவும் ஆங்கிலவழிக் கல்வி வழங்குமாறு பரிந்துரைக்கவில்லை. தேசியக் கல்வி ஏற்பாடு (NCF) 2005 பயிற்றுமொழி, தாய்மொழி என்றே கூறுகிறது. 2009 கல்வி உரிமைச்சட்டம்கூட கூடுமானவரையில் தாய்மொழியே பயிற்றுமொழி எனக் கூறுகிறது. அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்விப் பிரிவு நடைமுறைப்படுத்தப்படும் எனும் அரசு அறிவிப்பு NCF 2005, RTE 2009 ஆகியவற்றிற்கு எதிராக அமைந்துள்ளது.
எனவே, அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவைத் தொடங்கும் முடிவைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று இக்கருத்தரங்கு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் : 2
பள்ளிக்கல்வி மற்றும் பட்ட வகுப்புவரை தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு மட்டும் தற்பொழுது வேலை வாய்ப்பில் 20 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதை மாற்றியமைத்து +2 வகுப்புவரை தமிழ் வழியில் பயின்றவர்களைத் தமிழ்வழியில் கற்றவர்களாக வரையறுத்து அவர்களுக்குத் தமிழக அரசு, தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு என்பதை 80 விழுக்காடாக உயர்த்த வேண்டும். இதன் மூலம் மட்டுமே தமிழக மக்களிடையே தத்தம் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை உருவாகும். ஆகவே, இதைச் சட்டமன்றத்தில் சட்டமாக இயற்றி உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இக்கருத்தரங்கு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் : 3
1999ஆம் ஆண்டு தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி 102 தமிழறிஞர்கள் நடத்திய சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டத்தின் விளைவாகத் தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்புவரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அது உரிய பலனைத் தரவில்லை. ஆகவே அதே அரசாணையைச் சட்டமன்றத்தில் சட்டமாக்கி அதனைத் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசை இக்கருத்தரங்கு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 4
நாடு முழுவதும் சமமான வாய்ப்பை அனைத்து மாணவர்களும் பெறும் வகையில் ஒரே சீரான கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம். சமத்துவமான சமூகம் படைக்க விழையும் நமது அரசமைப்புச் சட்டம், குழந்தைகள் அரசின் பொறுப்பில் கல்வி உரிமையைப் பெற்றுப் பயன்பெறவே வழிகாட்டுகின்றது. முன்னேறிய, முன்னேறுகின்ற அனைத்து நாடுகளிலும் இம்முறையே நடைமுறையில் உள்ளது. எனவே, அனைத்துக் குழந்தைகளுக்கும் மேனிலைப்பள்ளிக் கல்வி வரை கட்டாயக் கட்டணமில்லாக் கல்வியை, அரசின் முழுப்பொறுப்பிலும் செலவிலும், தாய்மொழி வழியில், அருகமைப்பள்ளி அமைப்பில், பொதுப்பள்ளிமூலம் வழங்க அரசமைப்புச் சட்டம் மீண்டும் திருத்தப்பட வேண்டும். மேலும் தற்பொழுது பொதுப்பட்டியலில் உள்ள கல்வி, 1976க்கு முன் இருந்ததுபோல் மாநிலப் பட்டியலுக்குத் திரும்பக் கொண்டு வரப்பட வேண்டும் என்று இக்கருத்தரங்கு வலியுறுத்துகிறது.
தீர்மானம் : 5
அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்புப் பாடங்களை நடத்துவதும் +1 வகுப்பிலேயே +2 பாடங்களை நடத்துவதும் தனியார் கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாகத் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அரசு பள்ளிகளைவிட அதிக மதிப்பெண் பெற்று வருகின்றனர். போட்டித் தேர்வுக்குச் செல்லும்பொழுது உயர்கல்வியின் சவால்களைச் சமாளிக்க முடியாமல் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். கல்வியில் இத்தகைய அநீதியை ஒழிக்க ஆந்திராவில் உள்ளதுபோல +1 வகுப்பிலும் பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று இக்கருத்தரங்கு வலியுறுத்துகிறது.
தீர்மானம் : 6
கல்வி குறித்து அரசின் பொறுப்பை வெளிப்படுத்தும் வகையில் முதல் கட்டமாக தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். பிறகு படிப்படியாகத் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசு பள்ளிகளாக மாற்றியமைக்க வேண்டும். அதே சமயத்தில் அரசு பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று இக்கருத்தரங்கு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் : 7
இட ஒதுக்கீடு இல்லாமல் இந்தியாவில் நடந்த முதல் பணியமர்த்தத் தகுதித் தேர்வு தமிழ்நாட்டில்தான் நடந்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற மாநிலங்களைப்போல தமிழ்நாட்டிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இக்கருத்தரங்கு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் : 8
கல்வியில் மட்டுமல்லாது ஆட்சிமொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் ஆலயங்களில் வழிபாட்டு மொழியாகவும் கட்டாயமாகத் தமிழை முன்னிறுத்த அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்திலுள்ள தனியார் நிறுவனங்களிலும் நடுவண் அரசு அலுவலகங்களிலும் தமிழை அலுவல் மொழியாக நடைமுறைக்குக் கொண்டுவரச் சட்டமியற்ற வேண்டும் என்று இக்கருத்தரங்கு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் : 9
ஆங்கிலம் மற்றும் இந்தி மேலாண்மை தமிழ்நாட்டின் மீதான இந்திய - பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலாகவும் தமிழினத்தின் மீதான ஒடுக்குமுறையாகவும் அமைந்துள்ளதென்று இக்கருத்தரங்கம் கருதுகிறது. ஆகவே, தமிழ் மக்கள் மீதான இந்திய - பன்னாட்டுச் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக அணிதிரண்டு போராட முன்வரவேண்டுமென்று தமிழக மக்களை இக்கருத்தரங்கு அறைகூவி அழைக்கிறது.
தீர்மானம் : 10
தமிழ்வழிக் கல்வி குறித்து வலியுறுத்திக் கருத்துத் தெரிவித்த அனைத்து இயக்கங்களுக்கும் தமிழ்ச் சமூகக் கல்வி இயக்கம் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. எதிர்வரும் நாட்களில் தமிழ்வழிக் கல்வி குறித்த விழிப்புணர்ச்சியைப் பொதுமக்களுக்கிடையேயும் மாணவர்களிடையேயும் உருவாக்க அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் தங்களது கட்சித் திட்டத்தின் முதன்மைச் செயல்திட்டமாகத் தமிழ்வழிக் கல்வியை இணைத்துக்கொள்ள வேண்டும். தத்தம் கட்சி சார்பாக இதுகுறித்துத் தமிழகமெங்கும் மக்கள் பேரணி, விழிப்புணர்ச்சிக் கருத்தரங்கு, பெருந்திரள் ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் போன்றவற்றை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இக்கருத்தரங்கு அன்போடு அழைக்கிறது

0 கருத்துகள்:

Post a Comment