ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாடு தொடர்பாக அரசாங்கம் அலட்டிக்கொள்ளவில்லை. இதேவேளை இம்மாநாட்டில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணைகளுக்கு முகம் கொடுக்கவும் அரசாங்கம் தயாராகவுள்ளது என்று ஊடகத் துறை அமைச்சரும் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆராயப்படவுள்ளது. அதேவேளை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை ஒன்றைக் கொண்டு வரவும் உள்ளது. இவ்விடயம் தொடர்பாக இன்று ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையில் இடம்பெற்ற 30 வருடகால கொடூர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து சில வருடங்களே ஆகின்றன. இந்நிலையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் இடம்பெறும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறுவது நியாயமற்றதாகும்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்பது இந்நாட்டின் ஜனாதிபதி மூலம் ஏற்படுத்தப்பட்டதே தவிர வேறு யாராலும் அல்ல. இந்த ஆணைக்குழு அறிக்கையில் இடம்பெறும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என எங்களுக்கு யாரும் கோரிக்கை விடுக்க அதிகாரம் இல்லை.
இதேவேளை நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் இடம்பெறும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டுதான் வருகின்றோம். எல்லா பிரச்சினைகளுக்கும் குறைந்த காலத்தில் தீர்வை பெற்றுகொடுக்க முடியாது. காலத்திற்கு ஏற்ற வகையில் நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்றார்
0 கருத்துகள்:
Post a Comment