Search This Blog n

30 October 2013

தீபாவளி போனசாக வெற்றுக் கவரை கொடுத்த அமைச்சர்?


உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தீபாவளி போனசாக தங்களுக்கு பணம் இல்லாத வெற்று கவரை கொடுத்ததாக அதிமுக நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.

தமிழகம் முழுவதுமுள்ள இரண்டாம் கட்ட கட்சி நிர்வாகிகளுக்கு தீபாவளி போனஸ் கொடுக்கச்சொல்லி ஆளும் தரப்பு உத்தரவிட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் டெண்டருக்கான நிதி ஒதுக்கி, அதிலிருந்து வரும் கமிஷனை தரவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டு கமிஷனை வாங்கிய அமைச்சர் காமராஜ் அந்த பணத்தை கட்சி நிர்வாகிகளுக்கு கொடுக்க மனமில்லாமல் ஒவ்வொரு ஒன்றிய நிர்வாகியிடமும் முன்னூறு வெற்று கவர்களை கொடுத்து விட்டு வரச்சொல்லியுள்ளார்.

கவர் வந்த விபரம் மற்ற நிர்வாகிகளுக்கு தெரிந்ததும் ஒன்றிய நிர்வாகிகளை மொய்க்க தொடங்கி விட்டார்கள். ஒன்றிய நிர்வாகிகளோ விழி பிதுங்கி பதில் சொல்ல முடியாமல் அமைச்சரை தொடர்பு கொண்டு விபரத்தை சொல்லியிருக்கிறார்கள்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் இன்னும் ஒரு மாதத்திற்குள் ஊரக வளர்ச்சித்துறை மூலம் ஊரக சாலை போடும் திட்டத்திற்கான டெண்டர் வரவிருக்கிறது. அந்த டெண்டரை எடுக்க இப்போதே காண்ட்ராக்டர்களை தேடிப்பிடித்து அவர்களிடம் கமிஷனை முன்பணமாக பெற்று மற்ற நிர்வாகிகளுக்கு கொடுக்குமாறு சொல்லியுள்ளார்.

இந்த பதிலை கேட்ட ஒன்றிய நிர்வாகி, எப்போதோ வரவிருக்கும் டெண்டருக்கு இப்போதே காண்ட்ராக்டர்களை தேடிப்பிடித்திருக்கிறார்கள் என்ற அவர்களிடம் காலில் விழாத குறையாக முன்பணம் வாங்கி அதை அமைச்சர் கொடுத்த வெறும் கவரில் வைத்து தீபாவளி போனசாக நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளார்.

இப்படி போனசுக்காக அலைக்கழிக்கப்பட்ட நிர்வாகி ஒருவர் கூறுகையில், இதுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை மூலமாக 78 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டார்கள், அதுல வந்த கமிஷன்ல இருந்தாவது எங்களுக்கு அள்ளி கொடுக்காவிட்டாலும், கிள்ளி குடுத்துருக்கலாம்.

அதையும் தராம இப்ப நிர்வாகிகளுக்காக விடப்பட்ட டெண்டர் மூலமா வந்த பணத்துலயும் போனஸ் கொடுக்காம, எப்பவோ வரப்போற டெண்டருக்கு இப்ப பணம் வாங்கி தரச்சொல்லியிருக்காரு என்றும் அவரு மட்டும் நோகாம தீபாவளி கொண்டாடனும், கட்சிக்காக ஓடி, ஓடி உழைச்சி ஓடா தேய்ஞ்ச நாங்க வெறும் கவரை வாங்கனுமா என புலம்பியுள்ளார்.
 

0 கருத்துகள்:

Post a Comment