மத்திய பிரதேச மாநிலத்தில் தசரா திருவிழாவுக்கு கூடிய பக்தர்கள் நெரிசல் ஏற்பட்டதால் அதில் சிக்கி 50 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் தாட்டியா மாவட்டத்தில் உள்ள ரத்தன்கார் பகுதியில் துர்கை கோயில் உள்ளது. இங்கு தசரா விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம்.
இன்றைய விழாவில் சுமார் 5 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் திரண்டதால் அம்மனை வழிபட சிந்து நதிக்கரையில் உள்ள இந்தக்கோயிலுக்கு பாலத்தின் மூலம் பலரும் நடந்து சென்றனர்.
இந்நிலையி்ல் பாலம் இடிந்து விழுந்ததாக வதந்தி பரவியதால் உயிர்தப்புவதற்காக பக்தர்கள் அங்கும், இங்கும் ஓடியுள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலை சமாளிக்க பொலிசார் லேசான தடியடி நடத்தியுள்ளனர்.
இதில் அச்சமுற்ற பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி சிதறி ஓடியதால் இந்த நெரிசலில் பலர் மிதிபட்டு இறந்தனர். சிலர் அருகில் உள்ள சிந்து நதியில் குதித்தனர்.
இது வரை 50 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலர் கவலைக்கிடமாக உள்ளதால் இன்னும் உயிர்ப்பலி அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் மீட்பு படையினர் நெரிசலில் சிக்கி, காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கவலையும், இரங்கலும் தெரிவித்துள்ளார்
மேலும் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்
களுக்கு தலா ஒன்றரை லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கபடுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment