Search This Blog n

19 October 2013

பெண்ணின் சடலத்துடன் 10 மாதங்கள் வாழ்ந்த குடும்பம்



நாகர்கோவிலில் இறந்து போன பெண்ணின் சடலத்துடன் அவரது குடும்பமே 10 மாதங்கள் வாழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் ராமவர்மபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணிய பிள்ளை. இவர் இறந்து விட்டார். இவரது மனைவி சரோஜினி(89). இவர்களுக்கு உமாதேவி(56) என்ற மகளும், பெருமாள், செல்வம் பிள்ளை (53) என்ற மகன்களும் உண்டு.
உமாதேவியின் கணவர் பெயர் தாணுப்பிள்ளை. இவர்களுக்கு சிவபிரசாத் (25) என்ற மகன் உள்ளார். குடும்ப தகராறு காரணமாக உமாதேவி தனது கணவரை பிரிந்து, மகன் சிவ பிரசாத்துடன் ராமவர்மபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் பெருமாளும் இறந்து போனார். இதையடுத்து சரோஜினியுடன், செல்வம் பிள்ளை, உமாதேவி, அவரது மகன் சிவ பிரசாத் ஆகியோர் மட்டுமே வசித்து வந்தனர்.

செல்வம் பிள்ளைக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டும் டிசம்பர் 3ம்திகதி , உடல் நிலை சரியில்லாமல் உமாதேவி இறந்து விட்டார்.
ஆனால் அவரது உடலை வீட்டில் இருந்தவர்கள் அடக்கம் செய்யாமல் ஒரு துணியில் நன்றாக உடலை கட்டி வீட்டின் ஒரு அறைக்குள் வைத்து பூட்டி விட்டனர்.
சரோஜினி வீடு 10 அறைகள் கொண்ட பெரிய பங்களா வீடு ஆகும். மேலும் இவர்களுடன் அக்கம் பக்கத்தினர் யாரும் எந்த தொடர்பும் வைத்ததில்லை. எப்போதும் கதவை பூட்டிக் கொண்டு உள்ளே தான் இருப்பார்கள்.

இந்நிலையில் நேற்று மதியம் செல்வம்பிள்ளை மட்டும் வீட்டில் இருந்து வெளியே வந்து அருகில் வசிக்கும் சாந்தி வீட்டுக்கு சென்று செலவுக்கு பணம் கிடைக்குமா? என கேட்டுள்ளார். அப்போது சாந்தியின் மகன் ரூ.500 கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சாந்தி அவருடன் வீட்டிற்குள் சென்றபோது அங்கிருந்த ஒரு அறையில் இருந்து துர்நாற்றம் அதிகமாக வந்தது. அந்த அறையை சாந்தி பார்த்ததும், வீட்டில் இருந்தவர்களின் நடவடிக்கை மாறியது.
பதற்றத்துடன் வெளியே ஓடி வந்த சாந்தி இதுகுறித்து காவல்துறைக்கு தெரிவித்துள்ளார்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் சந்தேகத்துக்குரிய அறையை திறந்து உள்ளே துணியில் கட்டி வைக்கப்பட்டு இருந்ததை வெளியே எடுத்து வந்து பிரித்து பார்த்ததில் அதிர்ச்சி அடைந்தனர்.

உமாதேவி உடல் அழுகிபோய் இறுகிய நிலையில் இருந்தது. உடனடியாக உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வீட்டில் இருந்தவர்களிடம் கேட்ட போது, ஏதோ உருவத்தை பார்த்து இறந்து விட்டாள் . மேற்கொண்டு எதுவும் கேட்காதீர்கள் என கூறியுள்ளனர்.

பொலிசார் அவர்களிடம் விசாரணை நடத்தியும் எதையும் அவர்கள் எதையும் கூறவில்லை.

கிட்டத்தட்ட சுமார் 10 மாதங்களாக சடலத்துடன் இவர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். இவர்கள் வீட்டு அருகில் யாரும் செல்லாததால் துர்நாற்றம் தெரியவில்லை.
இந்த சம்பவமானது நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

0 கருத்துகள்:

Post a Comment