தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்த 7 பெண்கள் பார்வை இழந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் ரமேஷ்குமார் இதுதொடர்பாக தாக்கல் செய்த பொதுநல மனுவில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சேந்தமரத்தை சேர்ந்த மாரியம்மாள் (69), லட்சுமி (61), வி.செல்லம்மாள் (65), எம்.செல்லம்மாள் (63), ஜி.செல்லம்மாள் (63), மரியம் ஆயிஷா (52), சுப்பம்மாள் (61) ஆகியோருக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் ஏப்ரல் 10ம் திகிதி கண் அறுவை சிகிச்சை நடந்தது.
பின்னர் அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடந்த கண்ணில் எரிச்சல், நீர் வடிதல் ஏற்பட்டன. பாளை அரசு மருத்துவமனையில் சோதனை நடத்திய போது, 7 பேருக்கும் ஒரு கண் பார்வை பறிபோனது தெரியவந்தது.
எனவே பாதிக்கப்பட்ட இவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பார்வை இழப்புக்குக் காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் 2011ம் ஆண்டில் திருச்சி தனியார் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த 66 பேருக்கு பார்வை பறிபோனது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. அதேபோன்று இந்த சம்பவம் தொடர்பாகவும் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெய்சந்திரன், வேணுகோபால் மனுவுக்கு, சிபிஐ இணை இயக்குனர், மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர், தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர், நெல்லை மாவட்ட ஆட்சியர், எஸ்.பி மற்றும் தென்காசி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment