பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்ததாக பொலிசில் பிடிபட்ட பக்ரூதின் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
வேலூரில் இந்து முன்னணி மாநில பொறுப்பாளர் வெள்ளையப்பன் மற்றும் சேலத்தில் பாஜக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க சிபிசிஐடி, ஏடிஜிபி நரேந்திரபால் சிங், ஐஜி மகேஷ்குமார் அகர்வால், எஸ்பி அன்பு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
மேலும் உளவுப்பிரிவு ஐஜி கண்ணப்பன், எஸ்பி அருளரசு ஆகியோர் கொண்ட தனிப்படையும் களமிறங்கியது.
இந்நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த தீவிரவாதி பக்ருதீனை பொலிசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் ஆந்திர மாநிலம் புத்தூரில் தீவிரவாதிகள் தங்கியிருந்த வீட்டை அதிரடிப்படையினர் நேற்று சுற்றிவளைத்தனர்.
10 மணி நேர துப்பாக்கி சண்டைக்கு பிறகு அந்த வீட்டில் இருந்த தீவிவாதிகளான பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களது கூட்டாளி அபுபக்கர் சித்திக் மாயமானார். பிலால் மனைவி அகினா பானு மற்றும் 3 குழந்தைகள் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நேற்றிரவு சென்னை கொண்டு வரப்பட்டனர். துப்பாக்கி சண்டையில் காயமடைந்த பன்னா இஸ்மாயில், அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் சென்னையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி பக்ருதீனை நேற்றிரவு வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதால், 13 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் பொலிசார் மனு தாக்கல் செய்தனர்.
பக்ருதீனை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். இதனைத் தொடர்ந்து தீவிரவாதி பக்ருதீனிடம் பொலிசார் ரகசிய இடத்தில் விசாரித்தனர்.
விசாரணையின்போது பக்ருதீன் அளித்த வாக்குமூலத்தில், தமிழகத்தில் இந்து தலைவர்களின் எழுச்சியை கட்டுப்படுத்த முடிவு செய்தோம். பாஜ மூத்த தலைவர் அத்வானி, மதுரைக்கு ரதயாத்திரை வருவதை அறிந்தோம்.
அவரை கொல்ல மதுரை திருமங்கலம் பாலத்தின் அடியில் பைப் குண்டு வைத்தோம். அதை பொலிசார் கண்டுபிடித்து அகற்றிவிட்டனர். அடுத்தகட்டமாக இந்து இயக்கங்களில் உள்ள தலைவர்களை கொல்ல முடிவு செய்தோம்.
அதன்படி தென்காசி குமாரபாண்டியன், வேலூர் வெள்ளையப்பன், சேலம் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோரை கொன்றோம். சில இந்து தலைவர்களை குறி வைத்து தாக்கினோம். அவர்கள் உயிர் பிழைத்துவிட்டனர். இன்னும் பலரது பெயர் பட்டியல் எங்களிடம் உள்ளது.
அதன் பின்பு பொலிசாரின் தேடுதல் வேட்டை அதிகரித்தது. நெல்லை, சென்னை, கோவையில் தனிப்படையினர் எங்களை தேடி ஆரம்பித்தனர்.
இதனால் தமிழக ஆந்திரா எல்லையான புத்தூருக்கு இருப்பிடத்தை மாற்றினோம். அங்கு முதலில் ஒரு வாடகை வீட்டில் தங்கினோம். வீட்டு உரிமையாளரிடம் தகராறு ஏற்பட்டதால் வேறு இடத்துக்கு குடி போனோம்.
பகலில் இரும்பு வியாபாரம் செய்வோம். இரவில் சதி திட்டம் தீட்டுவோம். ஆடிட்டர் ரமேஷ், வெள்ளையப்பனை கொலை செய்யும் ரகசிய திட்டம் அங்குதான் தீட்டப்பட்டது.
தற்போது திருப்பதியில் பிரம்மோற்சவம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து குடை ஊர்வலம் செல்வதை தடுக்க நினைத்தோம். திருப்பதி குடை ஊர்வலத்தில் நாசவேலையில் ஈடுபட முடிவு செய்தோம்.
மேலும் பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, இம்மாதம் 18ம் திகதி சென்னை வர திட்டமிட்டுள்ளார். அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து, அதற்கான திட்டத்தை தயாரித்துக் கொண்டிருந்தோம். அதற்குள் பொலிசில் சிக்கிவிட்டோம்.
எங்களை கைது செய்யாமல் இருந்திருந்தால் தாக்குதல்களை அரங்கேற்றி இருப்போம் என்று தீவிரவாதி பக்ருதீன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment